

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தசரா விழாவின் போது மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இரு கோஷ்டிகளாக பிரிந்து கட்டைகளால் தாக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட சாமியை தரிசிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு நடந்த இவ்விழாவில், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறுவன் பலியானான்; 65 பக்தர்களின் மண்டை உடைந்தது.
கர்னூல் மாவட்டம் தேவரகட்டா பகுதியில் மல்லேஸ்வர சாமி (சிவன்) கோயில் உள்ளது. ஆந்திரா-கர்நாடகா மாநில எல்லையில் இக்கோயில் உள்ளதால் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அதிகமாக இக்கோயிலுக்கு வருவது வழக்கம். இக்கோயிலில் ஆண்டு தோறும் தசரா விழா வெகு சிறப்பாக நடைபெறும். கிருஷ்ண தேவ ராயர் காலம் முதல் இவ்விழா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இவ்விழாவில் விஜய தசமியன்று நள்ளிரவு சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும். அதற்கு முன்பாக அப்பகுதி மக்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து கட்டை, தீப்பந்தம் போன்றவற்றால், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட சாமி தரிசனம் செய்வது ஐதீகம்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இரு கோஷ்டியினரும் கட்டைகளால் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் 65 பக்தர்களின் மண்டை உடைந்தது. இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் அனைவரும் ஆதோனி, கர்னூல் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் பலரும் காயமடைந்தனர்.
ஒருகட்டத்தில் தீவிரமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் காவல் துறையினர் தலையிட்டு விலக்கி விட முயன்றனர். ஆனால் பக்தர்கள் அடித்துக் கொள்வதை நிறுத்தவில்லை. இதனால் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டும் வீசினர். இதனால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நேரானிகினி கிராமத்தை சேர்ந்த லிங்காயத்தி மஹேஷ் (11) என்ற சிறுவன் உயிரிழந்தான்.