Last Updated : 16 Mar, 2014 03:20 PM

 

Published : 16 Mar 2014 03:20 PM
Last Updated : 16 Mar 2014 03:20 PM

நாடாளுமன்றத்தில் கட்சிகளின் வருகைப் பதிவு: முதலிடத்தில் அதிமுக; திமுகவுக்கு 3வது இடம்

நாடாளுமன்ற வேலை நாட்களில் கட்சிகளின் வருகைப் பதிவில் சராசாரியாக 86.83 சதவீதம் பெற்று அதிமுக எம்.பி.க்கள் முதலிடம் வகிக்கின்றனர். அனைத்து எம்.பி.க்களின் சதவீதத்தில் மிக அதிகமாக காங்கிரசின் எம்.பி.யான எஸ்.எஸ்.ராமசுப்பு 98.77% பெற்று முதலிடம் வகிக்கிறார்.

நாடாளுமன்ற இணைய தளத்தில் பதிவாகி உள்ள எம்.பி.க்களின் வருகைப் பதிவு புள்ளி விவரங்களை `வாகை அட்வைசரி’ என்ற தனியார் புள்ளி விவர சேகரிப்பு ஆய்வு நிறுவனம் தொகுத்துள்ளது.

இதன்படி மிகவும் அதிகமாக 98.77 சதவீதங்களில் வருகை புரிந்திருப்பவர் காங்கிரசின் திருநெல்வேலி தொகுதி எம்.பி.யான எஸ்.எஸ்.ராமசுப்பு. குறைவாக வெறும் 38 சதவீதம் வருகை புரிந்துள்ளார் ஜே.கே.ரித்தீஷ்.

மத்திய அமைச்சர்களாக இருக்கும் உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெப்பம் இட வேண்டியது இல்லை. எனினும், திமுக அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த பின் வருகை தந்த வேலைநாட்களின் சதவீதமும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இதில், மிக மிகக் குறைவாக 2.62 சதவீதம் மட்டும் வருகை தந்திருப்பவர் மதுரை தொகுதி திமுக உறுப்பினரான மு.க.அழகிரி மற்றும் பெரம்பலூரின் எம்.பி. டி.நெப்போலியன்.

இவர்களை போல், அமைச்சராக இருந்து ராஜினாமாவுக்கு பின் வருகை தந்தவர்களில் முறையே, தயாநிதி மாறன் 61.09, ஜி.காந்திசெல்வன் 54.04, எஸ்.ஜெகத்ரட்சகன் 19.72 மற்றும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 27.96 சதவீதம் வருகை புரிந்துள்ளனர்.

ப.சிதம்பரம், மத்திய அமைச்சராகவே கடைசிவரை இருந்தமையால் அவர் வருகை பதிவேட்டில் கையெப்பம் இடும் அவசியமில்லாமல் போனது. இதனால், அவர் நாடாளு மன்றத்துக்கு வருகைதந்த நாட்களை கணக்கிட முடியாது.

கட்சி வாரியாக எடுத்து கொண்டால், திமுகவின் 18 எம்.பி.க்களில் டி.கே.எஸ்.இளங்கோவன் அதிகமாக 90.85 சதவீத நாட்கள் வந்துள்ளார். குறைவாக ஜே.கே.ரித்தீஷ் 38 சதவீதம். அதிமுகவில் அதிகமாக கே.முருகேசன் ஆனந்த் 92 சதவீதம். குறைவாக சி.ராஜேந் திரன் 76.30 சதவீத வருகை தந்துள்ளார். இதில், மத்திய அமைச்சர்களாக இருந்த வர்களின் வருகைப் பதிவுகள் சேர்க்கப்படவில்லை.

காங்கிரசில் அதிகமாக எஸ்.எஸ்.ராமசுப்பு வருகை 98.77 சதவீதம்., குறைவாக ஜே.எம்.ஹாரூண் 69.03 சதவீதம் ஆகும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒரே ஒரு எம்.பி.யான பி.லிங்கம் 98.14, மார்சிஸ்டு கம்யூனிஸ்டின் ஒரு எம்.பி.யான பி.ஆர்.நடராசன் 91.99 மற்றும் மதிமுகவின் ஒரு எம்.பி.யான ஏ.கணேசமூர்த்தி 72.27, விடுதலை சிறுத்தைகளின் தொல்.திருமாவளவன் 52.98 சத வீதங்களும் வருகை தந்துள்ளனர்

மொத்தமாக நம் தமிழக எம்.பி.க்களின் முழுவேலை நாட்களுக்கும் சராசரி வருகை 70.45. இதில், பெரிய கட்சி வாரியாக சராசரியில் முதலிடமாக அதிமுக 86.83, இரண்டாவதாக காங்கிரஸ் 85.16 மற்றும் கடைசியாக திமுக 54.67 சதவீதம் பெறுகிறது.

சிறிய கட்சிகளில் சிபிஐ 98.14, மார்க்சிஸ்ட் 91.99 மற்றும் மதிமுக 72.27 சதவீதம் ஆகும்.

அனைத்து உறுப்பினர்களும் சேர்த்து மற்றும் கட்சி வாரியாக என மிகவும் குறைந்த நாட்கள் வருகை தந்தவர்கள் மூன்று பேர் ஆவர். மு.க.அழகிரி, டி.நெப்போலியன் மற்றும் ஜே.கே.ரித்தீஷ். நண்பர்களான மூவரிடமும் காணப்படும் ஒரு ஒற்றுமை அவர்கள் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்கள் என்பது.

தமிழகம் மற்றும் புதுவையின் இந்த 40 எம்.பி.க்களும். நாடாளுமன்றம் வந்து செல்ல, தொகுதியில் இருந்து விமானம் மற்றும் ரயிலில் உயர் வகுப்புகள் இலவசமாக அரசு ஒதுக்குகிறது.

இதில் ரயில் பயணங்கள் கணக்கில்லாமல் அனுமதிக்கப் படுகிறது. விமானங்களில் எம்.பி.க்கள் மொத்தம் 48 முறை இலவசமாகவே டெல்லி சென்று வரலாம். இதில் 14 முறை தம்முடன் ஒருவரை அழைத்துச் செல்லலாம். இத்துடன், வேலை நாட்களில் ‘பேட்டா’ என நாள் ஒன்றுக்கு ரூபாய் இரண்டாயிரமும் தரப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x