Last Updated : 16 Mar, 2017 04:27 PM

 

Published : 16 Mar 2017 04:27 PM
Last Updated : 16 Mar 2017 04:27 PM

தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் இந்திய தூதர் பேச்சு: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

இந்தியத் தூதரகம் மூலமாக, தமிழக மீனவர் பிரச்சினை இலங்கை அரசிடம் கொண்டு செல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

இது தொடர்பாக மக்களவையில் நேற்று சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, “இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று சுடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தமிழக மீனவர் ஒருவர் இறந்துள்ளார். இந்தப் பிரச்சினையை இலங்கை அரசிடம் மத்திய அரசு கொண்டு சென்றது. சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த கவலை தெரிவித்தது. நமது மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கை பிரதமர் மற்றும் கடற்படை தளபதியிடம் நமது தூதர் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசினார். இந்திய மீனவர்களைச் சுடுவதற்கு ரோந்துப் படகுகளுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் தமிழக மீனவர் கொல்லப்பட்டதில் இலங்கை கடற்படைக்கு தொடர்பு இல்லை என்றும் அவர்கள் கூறினர். தமிழக மீனவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது” என்றார்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கச்சத் தீவு அருகே கடந்த மார்ச் 6-ம் தேதி இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் இறந்தார். மற்றொரு மீனவர் காயம் அடைந்தார்.

இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x