

தேநீர் விற்றவர் பிரதமராக முடிந்தது போல், மக்கள் மனது வைத்தால் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆகலாம் என்ற சிவசேனாவின் கருத்து தரம் தாழ்ந்து உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான தேர்தல் (இன்று) நடந்து வரும் வேளையில் சிவசேனா மற்றும் பாஜக ஒருவரை ஒருவர் தாக்கி கருத்து தெரிவித்து வருகிறது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் நேர்காணல் இன்று வெளியானது.
அதில், "தேநீர் விற்றவர் நாட்டின் பிரதமராக முடியும் என்றால், மக்கள் மனது வைத்தால் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதல்வர் ஆகலாம்.
மகாராஷ்டிராவில் மோடி மறைமுக அரசு நடத்த நினைக்கிறார். டெல்லியிலிருந்து வரும் கட்டளைக்கு ஆட்டம் போடும் அரசை இங்கு அமைக்க நினைக்கிறார். ஆனால் மாகாராஷ்டிர மண்ணில் அவரது நினைப்பு செல்லாது" என்று அவர் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சிவசேனாவின் கருத்து தரம் தாழ்ந்து இருப்பதாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் தேவேந்திர ஃபத்நவிஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சிவசேனா கட்சி பாஜக-வை விமர்சித்த விதம் தரைக் குறைவாக உள்ளது. மகாராஷ்டிரத்தின் அரசியல் சித்தாந்தம் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக இருந்ததே இல்லை" என்று தெரிவித்தார்.