உ.பி.யில் அகிலேஷுக்கே செல்வாக்கு: கருத்துக் கணிப்பு

உ.பி.யில் அகிலேஷுக்கே செல்வாக்கு: கருத்துக் கணிப்பு
Updated on
1 min read

உ.பி.,யை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் குடும்பத் தகராறு எதிரொலியின் காரணமாக அம்மாநில முதல்வர் அகிலேஷ் சிங் யாதவின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த தகவல் உ.பி.யின் முஸ்லிம் மற்றும் யாதவர் சமூகத்தினர் இடையே 'சி-வோட்டர்' நிறுவனம் நடத்திய மாதிரி வாக்கெடுப்பில் வெளியாகி உள்ளது.

கடந்த ஒருமாத காலமாக உ.பி. முதல்வர் அகிலேஷ் மற்றும் அவரது சித்தப்பாவான சிவ்பால்சிங் யாதவ் ஆகியோருக்கு இடையே கடும் மோதல் நிகழ்ந்து வருகிறது.

இதில் சிவ்பாலின் ஆதரவு அமைச்சர்கள் அகிலேஷால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இத்துடன் அவரது ஆதரவு பெற்ற முக்கிய அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து கோபம் கொண்ட சிவ்பால் தம் உபி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பிரச்சனையில் தலையிட்ட சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ், உ.பி. மாநில கட்சி தலைவர் பதவியை அகிலேஷிடம் இருந்து பறித்து சிவ்பாலுக்கு அளித்தார். இவ்வாறு தொடர்ந்த மோதல் இருவர் இடையே சமாதானம் செய்த பிறகும் அடங்கியபாடில்லை.

இந்நிலையில், சி-வோட்டர்ஸ் சார்பில் உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளிலும் மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுமார் 11,000 யாதவர்கள் குடும்பத்தினர் இடையே எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 70% பேர் அகிலேஷை மீண்டும் முதல் அமைச்சராக ஏற்க விரும்புவதாகக் கூறியுள்ளனர்.

ஆனால், இவரது தந்தையான முலாயம்சிங்கை 25 சதவிகித யாதவர்கள் மட்டுமே விரும்பி வாக்களித்துள்ளனர். இதேபோல், முஸ்லீம்களின் மாதிரி வாக்கெடுப்பில் 75% அகிலேஷுக்கும், வெறும் 19% முலாயமிற்கும் கிடைத்துள்ளது.

அகிலேஷ் மற்றும் அவரது சித்தப்பா சிவ்பாலில் யாருக்கு புகழ் அதிகம் என்றும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 77% அகிலேஷுக்கும் வெறும் 7% சிவ்பாலுக்கும் கிடைத்துள்ளது.

இதே வாக்கெடுப்பு சமாஜ்வாதி கட்சியினர் நடத்தப்பட்டதில் 88% அகிலேஷுக்கும் மீதம் பேர் மட்டும் சிவ்பாலுக்கு வாக்களித்துள்ளனர்.

சிறந்த முதல்வருக்கான வாக்கெடுப்பில் அகிலேஷுக்கு 66 மற்றும் முலாயமிற்கு 19% அளிக்கப்பட்டுள்ளது.

உபியின் கிரிமினல்களை ஒடுக்குவதில் அகிலேஷின் செயல்பாடுகள் பற்றியுன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. இதில் 38% பேர் அகிலேஷ் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை எனக் கூறி உள்ளனர். 24%பேர் அகிலேஷின் முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பதாக வாக்களித்துள்ளனர். ஆனால், 24% பேர் அகிலேஷ் கிரிமினல் ஒடுக்குவது என்பது தேர்தலுக்கான நாடகம் என்றும் கூறி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in