Published : 12 Oct 2014 01:38 PM
Last Updated : 12 Oct 2014 01:38 PM

மருந்து பொருள் விலை உயர்வு குறித்த மத்திய அரசு உத்தரவை எதிர்த்து வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயர்வு தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக, தேசிய மருந்து பொருள் விலை நிர்ணய ஆணையம் கடந்த 97-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு 348 மருந்துகளை பட்டியலிட்டு அவை முக்கியத்துவம் வாய்ந்தது என இந்த ஆணையம் அறிவித்தது. கடந்த மே 29-ம் தேதி 108 அத்தியாவசிய மருந்து பொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயித்து இந்த அமைப்பு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு மருந்து விற்பனை அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம், சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரின் சட்ட ஆலோசனைக்கு அனுப்பி வைத்தது. ‘இம்முடிவு மத்திய அரசின் அதிகார எல்லையை மீறிய செயல்’ என்று அவர் கருத்து தெரிவித்ததையடுத்து, மருந்து பொருட்களின் விலை நிர்ணய உத்தரவை கடந்த மாதம் 22-ம் தேதி மத்திய அரசு வாபஸ் பெற்றது.

இதை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் ஆறு கோடி ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உள்ளனர். இதய நோயாளிகள் 5.7 கோடி, நீரிழிவு நோயாளிகள் 4.1 கோடி, எய்ட்ஸ் நோயாளிகள் 2.5 லட்சம், காசநோயாளிகள் 22 லட்சம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 11 லட்சம் பேர் உள்ளனர்.

இவர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசு அதிகபட்ச விலையை நிர்ணயித்தது. ஆனால், மருந்து விற்பனை நிறுவனங்களின் நெருக்கடிக்கு பணிந்து இந்த உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. உள்நோக்கத்துடனும் வணிக நிறுவனங்களுக்கு சாதகமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவால் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை கடுமையாக உயரும் வாய்ப்புள்ளது. கோடிக்கணக்கான நோயாளிகளின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணை

தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, எஸ்.ஏ.பாப்தே, ஏ.எம்.சாப்ரே அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, இந்த மனுவின் முக்கியத்துவம் கருதி உடனே விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார். மத்திய அரசின் முடிவில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x