நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் மார்கண்டேய கட்ஜு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் மார்கண்டேய கட்ஜு
Updated on
1 min read

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அவர் மீதான வழக்கை கைவிட்டது.

கடந்த 2011 பிப்ரவரி 1-ம் தேதி கேரளாவின் எர்ணாகுளம்-சோரன்பூர் ரயிலில் பயணம் செய்த சவுமியாவை (23), தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி கீழே தள்ளினார். பின்னர் அவரும் ரயிலில் இருந்து குதித்து சவுமியாவை பலாத்காரம் செய்தார். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சவுமியா சில நாட்களில் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த திருச் சூர் நீதிமன்றம் கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோவிந்தசாமி மேல்முறையீடு செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், யூ.யூ.லலித் அடங்கிய அமர்வு கோவிந்தசாமியின் மரண தண்டனையை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்தது.

சவுமியா வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தவறான தீர்ப்பை வழங்கிவிட்டனர் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து கட்ஜு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கடந்த நவம்பரில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது மார்கண்டேய கட்ஜுவும் உச்ச நீதிபதிகள் ரஞ்சன் கோகோயும் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மார்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவாண், கட்ஜுவின் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, கட்ஜு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in