

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் கரீம் துண்டா, டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, டெல்லி பெருநகர முதன்மை நீதிமன்றத்தில் 20-ம் தேதி நீதிபதி அமித் பன்சால் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.
இது குறித்து துண்டாவின் வழக்குரைஞர் எம்.எஸ்.கான் கூறுகையில், ‘டெல்லியில் அக்டோபர் 1, 1997-ம் ஆண்டு சதர் பஜார் மற்றும் குதுப் சாலையில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் அப்துல் கரீம் துண்டாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர் மீது ஐபிசி 324, 307 மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 2 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என துண்டா மனு தாக்கல் செய்துள்ளார்’ என தெரிவித்தார்.
‘இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது ஷகீல் என்கிற ஹம்சா மற்றும் முகம்மது ஹமீர் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் டெல்லி போலீஸ் துண்டா மீது வழக்கு பதிவு செய்திருந்தது. தற்போது, அந்த இருவரில் ஒருவர் ஏப்ரல் 1999-லும், மற்றவர் ஏப்ரல் 2001-லும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். எனவே, அவர்கள் கரீம் தொடர்பாக அளித்த வாக்குமூலம் செல்லாத தாகி விடுகிறது’ என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டிருக்கும் துண்டா மீது நாடு முழுவதும் 21 வழக்குகள் பதிவாகி உள்ளன. மும்பை மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக அஜ்மல் அமீர் கசாபுக்குப் பிறகு நம்மிடம் சிக்கியுள்ள முக்கிய தீவிரவாதி துண்டா என்கிற அப்துல் கரீம் ஆவார்.
இவருக்கு, 1993-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு முதல் டெல்லி, ஐதராபாத் மற்றும் உத்தரப் பிரதேசம் உட்பட 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற சுமார் 40 குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் துண்டாவிடம் தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பும் விசாரணை செய்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி டெல்லி சிறப்பு போலீசார் தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட சோதனையில் சிக்கினார் துண்டா.