

மத்தியபிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
வேளாண் விளைபொருட்களை மாநில அரசு நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மத்தியபிரதேச விவசாயிகள் கடந்த 1-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 6-ம் தேதி மான்ட்சார் பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்ததால், தலைநகர் போபால், இந்தூர் உட்பட அம்மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது.
இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தின் மையப் புள்ளியான மான்ட்சாரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று தலைநகர் போபாலில் உள்ள தசரா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
விவசாயிகளின் பிரச்சினை களை நான் நன்கு அறிவேன். வேளாண் பொருட்களுக்கு நியாய மான விலை வழங்கப்படுவ தில்லை என்பதையும் நான் அறிவேன். விவசாயிகளுக்கு உறுதுணையாக அரசு இயங்கும். விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யும். இதற்காக, விவசாயிகள் லாபம் பெறும் வகையில் உரிய விலை வழங்கப்படும்.
வெவ்வேறு வகையான பருப்புகளுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை வழங்கப் படும்.
இவ்வாறு சவுகான் பேசினார்.
போராட்டம் தொடங்கிய மான்ட் சாரில் அமைதி திரும்பியதை அடுத்து நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த் தப்பட்டது.