

பல பள்ளிகள் வெறும் ‘மதிய உணவுப் பள்ளிக்கூடங்களாக’ மாறி விட்டன என்று மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின் போது அவர் கூறியதாவது:
பள்ளிகள் மதிய உணவுப் பள்ளிக்கூடங்களாக மாறிவிட்டன, மாணவர்கள் வருகின்றனர் சாப்பிடுகின்றனர் சென்று விடுகின்றனர். 8-ம் வகுப்பு வரை கட்டாய பாஸ் சட்டம் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து புதிய மசோதாவுக்கு திட்டமிட்டுள்ளோம், இதன்படி 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளில் குறைந்த பட்ச கற்றலைக் கூட எட்ட முடியாத மாணவர்களை பெயில் செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். பெயில் கூடாது என்ற சட்டத்தை மாற்ற வேண்டும் என்று மாநிலங்களும் கோரிக்கை வைத்துள்ளன.
6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் 2-ம் வகுப்புக்குரிய பாடத்தை கூட படிக்க முடியாமல் இருக்கிறார், அதே போல் 7-ம் வகுப்பு மாணவர் 3-ம் வகுப்புக்குரிய கணக்கைக் கூட சரியாகப் போட முடியாமல் தவிக்கிறார், இது மிகவும் சீரியசான விஷயம்.
கல்வியின் தரத்தை உயர்த்த கடந்த 3 ஆண்டுகளில் 47 கேந்திரிய வித்யாலயாக்கள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் 50 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களுக்காக 62 புதிய ஜவகர் நவோதயா வித்யாலயாக்கள் வருகின்றன. கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு கூறினார் ஜவடேகர்.