

இந்தியா வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயில் சேவையின் சோதனை ஓட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நேற்று தொடங்கி வைத்தனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் வங்கதேசத்தின் குல்னா நகருக்கு இடையே வரும் ஜூலை மாதம் முதல் பயணிகள் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் கூட்டாக கொடியசைத்து சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். அப்போது, மேற்குவங்க மாநிலத்தில் வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள பெட்ரபோல் நகரிலிருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது.
இந்தியா-வங்கதேசம் இடை யிலான ரயில் பாதை (பெட்ரபோல் வழி), சரக்கு ரயில் போக்குவரத்துக்காக கடந்த 2001-ம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.