இது வெறும் சுவர் அல்ல.. அன்பின் அடையாளம்

இது வெறும் சுவர் அல்ல.. அன்பின் அடையாளம்
Updated on
1 min read

சுவர் என்றாலே அது ஏதோ தடுப்பு சம்பந்தமானது என்பதே நம் அனைவரது நினைவிலும் முதலில் வந்துநிற்கும். ஆனால், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பல் மருத்துவர் ஒருவர் வெறும் சுவரை அன்பை, இரக்கத்தை வெளிப்படுத்தும் இடமாக மாற்றியிருக்கிறார். அந்த யுவதியின் பெயர் ஷ்ரவானி சீனு நாயக்.

அன்பின் சுவர் (A Wall of Kindness) இப்படித்தான் ஷ்ரவானி அந்த சுவருக்கு பெயரிட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடில் சிலர், தங்களை அடையாளப்படுத்தாமல் இலவச உணவு கூப்பன்களை விநியோகித்து வருகின்றனர். குறிப்பிட்ட சில இடங்களைத் தேர்வு செய்து அங்கு கூப்பன்கள் கிடைக்குமாறு செய்துள்ளனர். பசியால் வாடுபவர் எந்த தயக்கமும் இன்றி குறிப்பிட அந்த இடங்களுக்குச் சென்று உணவு கூப்பனை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இந்த உன்னதமான விஷயத்தை செய்பவர்களின் அடையாளம் இதுவரை யாருக்கும் தெரியாது. அடையாளம் ஏதும் தேடாமல் செய்யப்பட்ட அந்த உதவி பெருமளவில் பேசப்படுகிறது.

இதனால் ஈர்க்கப்பட்டு, அதே பாணியில் சேவை செய்ய நினைத்தார் ஷ்ரவானி. இச்சேவையை தான் மட்டுமே செய்வதைவிட சேவை மனப்பான்மை உடைய பலரையும் இணைக்க நினைத்தார். அதன் விளைவே அன்பின் சுவர்.

பிரிக்கும் சுவர் இல்லை.. இணைக்கும் சுவர்:

தற்போதும் தெலங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் அடையாளத்தைத் தெரிவிக்காமல் தங்களிடம் உள்ள தேவையற்ற பொருட்களை பிறர் பயன்பாட்டுக்கு பலரும் அளிக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி மைதானத்துக்கு எதிரே லயன்ஸ் மருத்துவமனை சுற்றுச்சுவரின் ஒரு சிறு பகுதியைத்தான் அன்பின் சுவராக மாற்றப்பட்டிருக்கிறது.

அந்த சுவரில் தெலுங்கில் "இது அன்பின் சுவர்.. இங்கே உங்களுக்குப் பயன்படாத புத்தகங்கள், உடைகள், காலணிகள், பழைய பொருட்களை விட்டுச் செல்லுங்கள்" என எழுதப்பட்டுள்ளது.

முதன்முதலில் கடந்த ஜூன் 4-ம் தேதி, ஒரு சிறுமி தனது புத்தகப் பையை விட்டுச் சென்றார். அடுத்தடுத்த நாட்களில் அங்கு உடைகள், காலணிகள், புத்தகங்கள் இன்னும் பல வகையானப் பொருட்கள் வைக்கப்பட்டன. அங்கே வைக்கப்படும் பொருட்களை தேவைப்படும் ஏழை எளியோர் மகிழ்ச்சியுடன் எடுத்துச் செல்கின்றனர்.

உதவி செய்பவர்களின் அடையாளமும் இல்லை உதவி பெறுபவர்களின் அடையாளமும் இல்லை. ஆனால், இங்கு அன்பு பரிமாறப்படுகிறது.

இந்த சுவர் தற்போது வெறும் சுவராக மட்டும் இல்லாமல் பலரை இணைக்கும் சுவராக இருக்கிறது.

தனது முயற்சி குறித்து ஷ்ரவானி கூறும்போது, "முதன்முதலில் இந்த யோசனை தோன்றியவுடன் அது குறித்து எனது கணவர் மருத்துவர் சீனு நாயக்கிடம் கூறினேன். அவரின் ஒத்துழைப்பு, ஊக்கத்துடன் இப்பணியை சிறப்பாக செய்ய முடிந்தது" என பெருமிதம் பொங்கக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in