Published : 31 Jul 2015 10:06 AM
Last Updated : 31 Jul 2015 10:06 AM

அரசியல் விவாத மேடைக்கு வித்திட்ட யாகூப் தூக்கு மேடை

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது, அரசியல் களத்தில் கொந்தளிப்பு மிக்க விவாதங்களைத் தூண்டியிருக்கிறது.

யாகூப் மேமனை அவசர அவசரமாக தூக்கில் போட்டதால் மத்திய அரசு, நீதித் துறை மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. அதேநேரம், இதுபோன்ற கருத்துகள் பொறுப்பற்றது என பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

நீதித் துறை மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறி?

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறும்போது, "யாகூப் மேமன் அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டுள்ளார். இதன் மூலம் மத்திய அரசு, நீதித் துறை மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசும் நீதித் துறையும் காட்டிய அதே கடமை உணர்வையும் வேகத்தையும் ஜாதி, மத பேதமின்றி மற்ற தீவிரவாத வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மீதும் காட்டுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது" என்றார்.

கடந்த 2008-ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் திக்விஜய் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'மனிதனைக் கொல்லும் அரசு'

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்: "ஒரு மனிதனை மத்திய அரசு தூக்கிலிட்ட செய்தியைக் கேட்டு மன வருத்தம் அடைந்தேன். அரசே மனிதனை கொலை செய்யும் இந்த வழக்கம் நம் அனைவரையும் கொலைகாரர்களாக சுருக்கி விட்டது. கொடும் செயல் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்காக அதற்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த தண்டனை காரணமாக அத்தகைய செயல் தடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. மாறாக, மேலும் அத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கவே அது வகை செய்கிறது. தீவிரவாதத்தை படைகளைக் கொண்டுதான் ஒடுக்க வேண்டும். மரண தண்டனை மூலம் அல்ல. | விரிவாக வாசிக்க - >தூக்கு தண்டனைகள் ஒருபோதும் பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்காது: சசி தரூர்

காங்கிரஸுக்கு பாஜகவின் பதிலடிகள்:

பாஜக செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா: "மணி சங்கர் அய்யராக இருந்தாலும், திக் விஜய் சிங்காக இருந்தாலும் எப்போதும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர். அந்த வகையில் சசி தரூரும் இணைந்துள்ளார். தீவிரவாதத்திலிருந்து விடுபட்டு அமைதியாக வாழ வேண்டும் என்று விரும்பும் மக்களை அவமதிக்கும் வகையில் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்" என்றார்.

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி: "மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியை தூக்கில் போட்டது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பொறுப்பில்லாமல் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார் ஜேட்லி.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்: "திக்விஜய் சிங்கின் கருத்து நீதித் துறையின் நடைமுறையையே கேள்விக்குறியாக்கி உள்ளது. அவரது கருத்து வருத்தத்துக்குரியது, எதிர்பாராதது ஆகும்."

"யாகூபுக்கு அரசியல் பின்புலம் இல்லை!"

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறும்போது, "யாகூப் மேமன் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் சரண் அடைந்தார் என உளவுத் துறை (ரா) முன்னாள் அதிகாரி பி.ராமன் தான் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். மேலும் முக்கியக் குற்றவாளி அல்லாத மேமனுக்கு மரண தண்டனை விதிப்பது சரியல்ல என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவரை தூக்கிலிட்டிருப்பது சரியல்ல" என்றார்.

ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி கூறும்போது, "பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்தி சிங் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இருந்ததைப் போன்ற அரசியல் பின்புலம் யாகூப் மேமனுக்கு இல்லாமல் போனதே அவர் தூக்கிலிடப்பட காரணமாக அமைந்தது. இதைப் பின்பற்றி பாபர் மசூதியை இடித்தவர்களையும் தூக்கிலிட வேண்டும்" என்றார்.

கலாமுக்கான உண்மையான அஞ்சலி எது?

இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதே கலாமுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி என்று தமிழக அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், "மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி யாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்): "யாகூப் மேமனின் விசாரணையில் பல்வேறு குறைகள் இருந்ததை அவரை சரணடையச் செய்த ரா உளவுப்பிரிவின் முன்னாள் அதிகாரி பி.ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். உலகம் முழுவதும் 140 நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்தியாவும் மரண தண்டனையை முற்றாக கைவிட வேண்டும். மரண தண்டனைக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்"

எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ் (அகில இந்திய தேசிய லீக்): "அப்துல் கலாம் என்னும் மாமேதை மறைந்ததற்காக உலக மக்கள் அனைவரும் கவலை கொண்டுள்ளனர். இந்த வேளையில், யாகூப் மேமனை தூக்கிலிட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. தானாக சரணடைந்த யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது இஸ்லாமிய சமூகம் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."

கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர்): "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் நடக்கும் நாளில், யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் மரண தண்டனை ஒழிப்பு குறித்த கலாமின் கோரிக்கையும் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது."

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x