Last Updated : 24 Jul, 2016 11:07 AM

 

Published : 24 Jul 2016 11:07 AM
Last Updated : 24 Jul 2016 11:07 AM

அரசியலில் ஜாதியை உதறி தள்ள முடியுமா?

எல்லா தேசிய கட்சிகளும் அரசியலில் ஜாதி பார்ப்பதை எதிர்க்கின்றன. அதேநேரம் ஜாதி அரசியலில் ஈடுபடு கின்றன. ஆனாலும் ஜாதி அடிப் படையிலான சதவீத உரிமையை யாராலும் இன்னும் பெற முடியவில்லை. பாஜகவைப் போல் வேறு எந்தக் கட்சியும் ஜாதிக்கு முக்கியத்துவம் தருவதாக தெரியவில்லை.

கடந்த 1984-ம் ஆண்டுக்கு பிறகு, சுய மாகவே தேசிய பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்றதாக நம்மால் எப்படி துணிந்து சொல்ல முடியும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரை பிரதமராக்கியது மட்டுமல்லாமல், 2 மாநில முதல்வர்களையும் பாஜக கொண்டு வந்துள்ளது. அத்துடன் பாஜக டிக்கெட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட வேட்பாளர்கள் கணிசமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

அந்த வகையில் காங்கிரஸை விட கடந்த 20 ஆண்டுகளில் அதிகாரம் மிக்க பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த தலைவர்கள் பலரை பாஜக உருவாக்கி இருக்கிறது. தலித் ஒருவரை கட்சி யின் தலைவராக கூட ஒரு முறை பாஜக வைத் திருந்தது. அரசியலில் ஜாதியை உதறி தள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த 2014-ம் ஆண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற பாஜக அதன் பிறகு பல அச்சுறுத்தல்களை சந்தித்து சமாளித்து வந்துள்ளது. இப்போது மிகப்பெரிய சிக்கல் பாஜக.வுக்கு வந்துள்ளது. அது ஏஏபி (ஆம் ஆத்மி கட்சி) என்ற மூன்றெழுத்திடம் இருந்ததோ, அல்லது சிறுபான்மையினரிடம் இருந்தோ சிக்கல் வரவில்லை. இந்துக்களிடம் இருந்துதான் சிக்கல் வந்துள்ளது.

குஜராத்தில் இறந்த பசுக்களின் தோலை உரித்தெடுத்த தலித் சிறுவர்களை வாகனத்தில் கட்டி இழுத்து சென்று தாக்கும் வீடியோ, மாயாவதியை உ.பி. பாஜக துணை தலைவர் தயாசங்கர் சிங் பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசியது காஷ்மீரில் தற்போது நிலவும் பிரச்சினை எல்லாம் நமது மனதில் இருந்து எடுத்தெறிவதாக உள்ளன.

ஜாதியை மிக முக்கியமாக கருதுவதற்கு முக்கியமான பல காரணிகள் இருக்கின்றன. முதலில் காங்கிரஸை போல் அல்லாமல், அல்லது மாநில எதிர்க்கட்சிகளாக இருக்கும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் அல்லது மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், இப்போது ஆம் ஆத்மி போன்ற கட்சிகளை போல் அல்லாமல் சிறுபான்மையினரின் வாக்குகளை பாஜக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

வாஜ்பாய் காலத்தில் ஓரளவு சிறுபான்மை யினரின் நம்பிக்கையை பெறுவதில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், வாஜ்பாய்க்கு பிறகு மீண்டும் மெஜாரிட்டேரியன் சித்தாந்தத்துக்கு பாஜக திரும்பி விட்டது. இப்படித்தான் முஸ்லிம் ஒருவரால் நினைக்க முடியும். உதாரணத்துக்கு 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அரசு இல்லத் தில் இப்தார் நிகழ்ச்சி நடப்பதை பிரதமர் நிறுத்தி விட்டார். அத்துடன் ராஷ்டிரபதி பவனில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு வந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் என்று மோடியை பிரதானப் படுத்த பாஜக.வுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் 80 எம்.பி. தொகுதிகளில் 73 இடங்களை பாஜக கைப்பற்றியதால், அக்கட்சியின் சிந்தனையாளர்கள் மாயாவதியை தலித்துகள் புறக்கணித்துவிட்டதாக சமாதானமாகி விட்டனர். ஆனால், கடந்த வாரம் நடந்த சம்பவம் 2014-ம் ஆண்டுக்கு முந்தைய நிலைக்கு திரும்பவும் கொண்டு சென்றுள்ளது.

மாயாவதியை தரக்குறைவாக பேசியதால் இந்த நிலை ஏற்படவில்லை. காங்கிரஸ் உட்பட மற்ற அரசியல் கட்சியினர் கூட இதற்கு முன்பு மாயாவதியை பல முறை தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். ஆனால், உயர் ஜாதி எண்ணத்தை இத்தனை ஆண்டுகளாக பாஜக கவனமாக கடைபிடித்து வருவதுதான் இதற்கு காரணம். அந்த சித்தாந்தத்தை பாஜக மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது.

பாஜக / ஆர்எஸ்எஸை பொறுத்த வரையில் சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. எனவே, பிராமணர் களை போலவே துப்பரவு தொழிலாளி, தோல் பதனிடுபவரும் முக்கியமானவர். மக்களிடம் ஜாதி பிரிவும், அவரவருக்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட திறன்களும் தொழில்களும் இருப்பதில் என்ன தவறு என்று கருதுகின்றன. இந்த நடைமுறையில் ஏதாவது மாற்றங்கள் கொண்டுவர கோரினால், குறிப்பாக அரசியல் அதிகாரம் பெற நினைத்தால், அதுதான் அரசிய லில் ஜாதியை தவறாகப் பயன்படுத்துவதாகும்.

இது மிகவும் சீரியஸான விஷயம். பாஜக.வின் கோட்பாட்டு தாயாக ஆர்எஸ்எஸ் இருக்கும் வரையில், ஜாதி முறையை புறந்தள்ளுவது பாஜக.வுக்கு சாத்தியமில்லை. ஏனெனில், ஆர்எஸ்ஸும் மனுதர்மத்தை குறை சொல்லாது. இது இன்னும் நிலைமையை மோசமாக்கும். ஜாதியின் அடிப்படையில் திறமை, தொழில் என்ற கருத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டால், உங்களால் வேறு எதுவும் பெரிதாக செய்துவிட முடியாது. எல்லா கட்சியினரும் கேமராக்கள் முன்னிலையில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக வார்த்தைகளில் ஜாலங்கள் செய்வது, அவர் களின் வீடுகளில் தண்ணீர் குடிப்பது போன்ற வழக்கமான செயல்களைதான் செய்ய முடியும்.

இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. அண்ணா ஹசாரே கூட மோசமான முறையில் ஜாதியை பயன்படுத்திக் கொண்டார். முஸ்லிம் சிறுவனும் தலித் சிறுவனும் ஹசாரேவுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைக்க ஏற்பாடு செய்தனர். முழுக்க முழுக்க ஒரு அரசியல் மேடையில் ஜாதி அடிப்படையில் சிறுவர்களை பயன்படுத்தியது அதுவே முதல் முறையாக இருக்கும்.

கடந்த 1925-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தொடங்கியதில் இருந்து அதன் எல்லா தலைவர்களும் உயர்ஜாதி பிராமணர்கள்தான். ஒருவர் மட்டும் ராஜ்புத் (பேராசிரியர் ராஜேந்திர சிங்) வகுப்பை சேர்ந்தவர்.

பாஜக.வில் உயர் பதவி வகித்தவர்கள் கூட உயர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான். பங்காரு லட்சுமணன் மட்டும்தான் ஒரே ஒரு தலித் தலைவராக பாஜக.வில் இருந்தார். ஆனாலும் தெகல்கா புலனாய்வு செய்தி சேகரிப்பின் போது, ரூ.2 லட்சம் வாங்கிய விஷயத்தில் பங்காருவை பாஜக கைகழுவிவிட்டது.

அதன்பிறகு அமைச்சர் திலீப் சிங் ஜுடியோ ரூ.5 லட்சம் வாங்கும் போது கேமராவில் சிக்கினார். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிட பாஜக மீண்டும் சீட் வழங்கியது. என்ன வித்தியாசம் என்றால், பங்காரு தலித்; திலீப் சிங் ராஜ்புத் வம்சத்தவர்.

ஒருமுறை ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ்.சுதர்சனிடம் பேட்டி எடுத்தேன். அப்போது ஓபிசி வகுப்பை சேர்ந்த உமாபாரதி எதிர்ப்பாளராக இருக்கிறார். அவரை கட்சிக்குள் வைத்திருப்பதால் உள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டேன். அதற்கு அவர் கூறும்போது, ‘‘உமா பாரதிக்கு 2 ஆளுமைகள் உள்ளன. முற்பிறவியில் அவர் சாதுவாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் அறிவாளியாக, சிறந்த பேச்சாளராக இருக்கிறார். இரண்டாவது அவர் ஒரு நாகரிகமான குடும்பத்தில் பிறந்திருக்க மாட்டார். அதனால்தான் அவர் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார். இதை அவரிடமே நான் கூறியிருக்கிறேன்’’ என்றார்.

இந்த அடிப்படை முரண்பாடுதான், கலாசாரத்தின் (இந்துத்வா) மூலம் ஒற்றுமை என்ற பழைய கனவை புரிந்து கொள்வதற்கு பாஜக / ஆர்எஸ்எஸ்-ஐ தடுக்கின்றது. சமுதாய (ஜாதி) ரீதியாக பிரிவினைதான் மிஞ்சி இருக்கிறது. எல்லா இந்துக்களும் (குறிப்பாக தலித்துகள்) பசுவை புனிதமாக கருதுவதில்லை என்பதை ‘பசு காவலர்களால்’ ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்பதும் தெரிகிறது.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஏ.எல்.பழனிசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x