

சஹாரா குழும நிறுவனங்களின் தலைவர் சுப்ரதா ராய் (65) உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார். இதற்காக போலீஸார் அவரை லக்னோவி லிருந்து டெல்லிக்கு திங்கள் கிழமை அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து லக்னோவின் டிரான்ஸ் கோம்தி பகுதியின் காவல்துறை கண்காணிப்பாளர் ஹபிபுல் ஹசன் கூறுகையில், "கான்பூர் வழியாக சாலைப் போக்குவரத்து மூலம் பலத்த பாதுகாப்புடன் சுப்ரதா ராயை போலீஸார் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்" என்றார்.
முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை திருப்பித் தராதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது. அத்துடன் மார்ச் 4-ம் தேதி 2 மணிக்கு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை லக்னோ காவல் நிலையத்தில் ஆஜரான அவரை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அவரை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, மார்ச் 4-ம் தேதி வரை குக்ரெயில் பகுதியில் உள்ள மாநில வனத் துறைக்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில் போலீஸ் காவலில் வைக்க தலைமை ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் ஆனந்த் குமார் யாதவ் உத்தரவிட்டிருந்தார்.