

நிதாரி கொலைக் குற்றவாளி சுரீந்தர் கோலியின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்து உத்தரவிட்டது.
டெல்லி நொய்டாவை அடுத்த நிதாரியில் 14 வயது சிறுமி ரிம்பா ஹல்தர் கொல்லப்பட்ட சம்பவம் கடந்த 2006-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, சுரீந்தர் கோலி மற்றும் தொழிலதிபர் மொணீந்தர் சிங் பாந்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் வீட்டருகே தோண்டிய போது ஏராளமான சிறுமி களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. குற்றவாளிகள் இருவர் மீதும் 16 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஐந்து வழக்குகளில் இருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, மொணீந்தர் சிங் பாந்தர் விடுவிக் கப்பட்டார். சுரீந்தர் கோலியின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் உறுதி செய்தன. அவர் தாக்கல் செய்த கருணை மனுவை குடியரசுத் தலை வர் ஜூலை 27-ம் தேதி நிராகரித்தார்.
நள்ளிரவில் நிறுத்திவைப்பு
சுரீந்தர் கோலியை கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அதிகாலை தூக்கிலிட மீரட் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்து வந்தது. இந் நிலையில், தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனுவை மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு தாக்கல் செய்தது. இதை ஏற்று முதல்நாள் நள்ளிரவு 1.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
‘சுரீந்தர் கோலியின் சீராய்வு மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, அனில் தவே, எஸ்.ஏ.பாப்தே ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி ஆஜராகி, ‘குற்றவாளி தன்னை காப்பாற்றிக் கொள்ள முறையான சட்ட ஆலோசனை கிடைக்கவில்லை. எனவே, அவரது தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், ‘இனிமேல் விசாரணை நீதிமன்றத்தில் சட்ட ஆலோசனை கிடைப்பதை உறுதி செய்யலாம். இந்த தீர்ப்பை பொறுத்தமட்டில், சீராய்வு செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. தீர்ப்பில் நாங்கள் முழுமையான திருப்தி அடைகிறோம். விசாரணை நீதிமன்றம் எந்த தவறும் இழைத் திருப்பதாக நாங்கள் கருதவில்லை’ என்று கூறி, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த உத்தரவையடுத்து, சுரீந்தர் கோலி துாக்கிலிடப்படுவது உறுதியாகி உள்ளது.