

இரு நாட்டு மீனவர் பிரச்சினை குறித்து இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எஸ்.பெரிஸுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் புதன்கிழமை டெல்லியில் விரிவான பேச்சு நடத்தினார்.
தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் பிரதிநிதிகள் கடந்த திங்கள்கிழமை சென்னையில் கூடி பேசினர். இதில் மீன்பிடிப்பு தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. என்றாலும் இது தொடர்பான இறுதி முடிவுகளை இரு நாடுகளின் அரசுகளும் வெளியிடும் என்று மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மீனவர் பிரதி நிதிகள் கூட்டம் தொடர்பாகவும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர். அப்போது மீனவப் பிரதிநிதிகள் அளித்துள்ள பரிந்துரைகளை இருநாடுகளின் அரசுகளும் ஆராய்வது என இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இந்திய – இலங்கை மீனவர்கள் பாதுகாப்புடனும், பத்திரமுடன் தங்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதை உறுதிப்படுத்த இரு நாடுகளின் அரசுகளும் ஒப்புக் கொண்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சந்திப்பில், இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாக சல்மான் குர்ஷித் தெரிவித்தார். மேலும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை விடுவிக்க பெரிஸ் எடுத்த முயற்சிகளை பாராட்டினார். - பி.டி.ஐ.