

அலகாபாத், பூல்பூர் மக்களவைத் தொகுதிகளில் பிரியங்கா போட்டியிட வேண்டுமென உத்தரப் பிரதேச காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அலகாபாத் காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு செவ்வாய்கிழமை அனுப்பி உள்ளது.
இது குறித்து உ.பி. மாநில செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங்கிடம் கேட்டபோது, 'பூல்பூர் தொகுதி நேரு குடும்பத்துடன் தொடர்புடைய தொகுதியாகும். அலகாபாத் அவர்களது சொந்த ஊர். இதனால், கடந்த 2 தேர்தல்களாக காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி கோரிக்கை வைக்கிறது. ஆனால், பிரியங்கா இந்த முறையும் அமேதி மற்றும் ராய்பரேலியை தாண்டி பிரசாரத்திற்கு கூட வர மாட்டார்.' என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நிர்மாலா சீதாராமன், 'வாரிசு அரசியலில் நம்பிக்கையுள்ள கட்சி மற்றொரு காந்தியை பற்றி பேசுகிறது. இவர், கடந்த தேர்தலில் தீவிரமாக செய்த பிரசாரத்தின் பலன் என்ன என்பது நாம் அனைவரும் பார்த்ததுதான்.' எனக் கிண்டல் அடித்தார்.
இதற்கு முன்பும் பலமுறை பிரியங்கா போட்டியிடப் போவதாக வதந்தி கிளம்பியது. இதை 2012-ல் ஒருமுறை பிரியங்காவே மறுத்தார். அவர் தனது பாட்டியான இந்திரா காந்தியின் முகஜாடை மற்றும் உடல்மொழியை கொண்டுள்ளதால், மக்கள் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. எனவே, அதை பயன்படுத்தி அரசியல் லாபம் பெற காங்கிரஸ் சரியான தருணம் பார்த்து கொண்டிருப்பது என்னவோ உண்மைதான்.