Published : 15 Apr 2017 07:17 PM
Last Updated : 15 Apr 2017 07:17 PM

ரூ.2,000 பந்தயத்திற்காக ரயில் தண்டவாளத்தில் நாசவேலை செய்த குற்றவாளிகள்

நடப்பு ஆண்டு ஜனவரி 24-ம் தேதி மும்பையை அடுத்த திவா அருகே எக்ஸ்பிரஸ் ரயில் வரும் தண்டவாளத்தில் 6.62மீ நீளமுள்ள 3.5 குவிண்டால் எடைகொண்ட இரும்புத் துண்டு ஒன்றை வைத்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மத்கவான் - மும்பை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பாலத்தில் பெரிய இரும்புத் துண்டை குறுக்காக வைத்து விபத்து ஏற்படுத்த முயற்சி செய்த கும்பலை போலீஸார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர், அன்றைய தினம் பாலத்தில் இரும்புத் துண்டு கிடப்பதை கவனித்த ஒருவர் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழனன்று ரயில் கொள்ளை நடத்த முயன்றதான ஒரு வழக்கில் பழைய குற்றவாளிகள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள்தான் விசாரணையில் அன்று பாலத்தில் இரும்புத் துண்டை வைத்து விபத்து ஏற்படுத்த முயன்றதாக ஒப்புக் கொண்டனர்.

இதுகுறித்து தானே போலீஸ் ஆணையர் பரம்பீர் சிங் கூறும்போது, “ரயிலில் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டுள்ளதாக வந்த துப்பின் அடிப்படையில் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கும் 5 பேரை கைது செய்தோம். இந்த விசாரணையின் போது ஜனவரி 24ம் தேதி ரயில் பாலத்தில் மிகப்பெரிய இரும்புத் துண்டை வைத்ததை ஒப்புக் கொண்டனர். அதாவது இந்த 5 பேர்களின் சிறுபிராய நண்பர் (இவரும் குற்றவாளி) மவுலா மகந்தர் இவர்களுக்கு ரயில் பாலத்தில் இந்த நாசவேலையைச் செய்தால் ரூ.2000 தருவதாகக் கூறியுள்ளார். மேலும் இந்த நாசவேலையைச் செய்டு விட்டு ரயில் என்ன ஆகிறது என்பதை அருகில் மறைந்திருந்து வேடிக்கை வேறு பார்த்துள்ளனர். ஆனால் விபத்து தவிர்க்கப்பட்ட போது இவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.

மகந்தர் என்பவர் இதற்கு முன் ரயில்வே வளாகங்களில் பலதிருட்டுகள் செய்த வழக்கில் மார்ச் 17-ல் கைது செய்யப்பட்டு தலோஜாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நாங்கள் தற்போது இந்த வழக்கு தொடர்பாக இவரை விசாரிக்க வேண்டுமெனக் கோரியுள்ளோம். அவரை விசாரித்தால்தான் இவர்கள் கூறியது போல் ரூ.2000 பந்தயத்திற்காக இந்த நாசவேலை செய்யப்பட்டதா, அல்லது இதைவிட பெரிய மோசடிக்காக இது செய்யப்பட்டதா என்பது தெரியவரும்” என்றார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: டேனிஷ் ஷெய்க் (26), சூரஜ் போஸ்லே (25), மொகமது ஷபீர் ஷெய்க் (34), நசீர் சையத் (24), ஜயேஷ் பரே (30)

இவர்கள் 5 பேரும் மும்ப்ரா பகுதியில் குற்றவாளி மகந்தருடன் வளர்ந்தவர்கள். இந்நிலையில் இந்த ஐந்து பேரும் ஏப்ரல் 17-ம் தேதி வரை காவலில் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x