

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நடைபெறும் போராட்டமும், வன்முறையும் சற்றும் குறையாத நிலையில் "பெல்லட் துப்பாக்கிகள் என்றால் என்ன? அவை ஏன் அபாயகரமானவை?" என்ற இந்தக் கேள்வியை தவிர்க்க முடியாது.
2010-ம் ஆண்டு காஷ்மீரின் வேனில் காலம் சுமூகமாக இல்லை. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 112 பேர் கொல்லப்பட்டனர். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பெல்லட் குண்டுகளை அறிமுகப்படுத்தியது. இது அபாயமற்றது எனத் தெரிவித்தது. போராட்டத்தில் பொதுமக்கள் பலியாவதைத் தடுக்க இத்தகைய பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவதாக தெரிவித்தது. ஆனால், பெல்லட் துப்பாக்கிகள் போராட்டங்களைக் கட்டுப்படுத்தியிருக்கிறதா?
மாறாக அண்மைக் காலங்களில் பெல்லட் துப்பாக்கியால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை பலநூறு மடங்காக அதிகரித்துள்ளது மட்டுமே மிச்சம். பெல்லட் துப்பாக்கிப் பயன்பாடு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பெல்லட் துப்பாக்கிகள் குறித்து அதிகம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அவற்றிற்கான பதிலகளும்:
பெல்லட் துப்பாக்கி என்றால் என்ன?
கூட்டத்தைக் கலைப்பத்தற்காக பயன்படுத்தப்படும் அபாயம் அல்லாத ஆயுதப் பட்டியலில் உள்ள ஒருவகை உபகரணம். உலகம் முழுவதும் இத்துப்பாக்கி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர வேட்டைக்காகவும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இவ்வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றைப் பயன்படுத்துவதற்கான காரணம் என்ன?
பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் காயப்படுத்தி, உடல் வேதனைக்கு உட்படுத்துதலே இவ்வகை துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கான முதல் காரணம். குறிப்பிட்ட தூரத்தில் இருந்து இதை பயன்படுத்தினால் மட்டுமே சேதம் ஏற்படாது. அருகாமையில் பயன்படுத்தினால் கண், காது போன்ற பாகங்கள் பாதிக்கப்படலாம். பெல்லட்டுகள் மெல்லிய திசுக்களை துளைத்துச் செல்லும். பெல்லட் ரக துப்பாக்கிகளை தேவை ஏற்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவும் இடுப்புப் பகுதிக்கு கீழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பெல்லட் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?
பெல்லட் துப்பாக்கியில் சிறிய பெல்லட்டுகள் குறைந்தது 100-வது இருக்கும். அவை காரீயத்தினால் செய்யப்பட்டவை. பால் பேரிங் போலவோ அல்லது வேறு வடிவத்திலோ பெல்லட்டுகள் இருக்கும். பெல்லட் துப்பாக்கியை ஒருமுறை இயக்கினால் 100 மீட்டருக்கு குண்டுகளை வீசி எறியும்.
பெல்லட் துப்பாக்கிகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன?
பெல்லட் துப்பாக்கிகள் இஷாபூரில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் உற்பத்தியாகின்றன.
பெல்லெட் துப்பாக்கிகள் எப்போது அறிமுகம் செய்யப்பட்டன?
ஜம்மு - காஷ்மீர் போலீஸாரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் கடந்த ஆகஸ்ட் 2010-ல் இந்த ரக துப்பாக்கியை பயன்படுத்தத் தொடங்கினர். சிஆர்பிஎப் வசம் இவ்வகை துப்பாக்கிகள் 600 இருக்கின்றன.
அவை எங்கெல்லாம் பயன்பாட்டில் உள்ளன?
இடது சாரி பயங்கரவாதம் தழைத்தோங்கும் பகுதிகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. அதிகமாக பயன்படுத்தப்படுவது காஷ்மீர் மாநிலத்தில் தான்.
பயன்பாடு?
2010-ல் 4/5 ரக பெல்லட் துப்பாக்கிகள் காஷ்மீரில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கு 110 உயிர்கள் பலியாகின. எனவே, தற்போது 8/9 வகை பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அபாயகரமானவை அல்ல.
காஷ்மீரில் பலியான சிஆர்பிஎப் வீரகள்
2016-ல் 1022 சிஆர்பிஎப் வீரர்கள் பல்வேறு தாக்குதலில் காயமடைந்தனர். அவர்களில் 956 பேர் கற்கள் வீசி நடத்தப்படும் போராட்டத்திலேயே காயமடைந்துள்ளனர். 44 வீரகள் கையெறி குண்டுகள் வீசப்பட்டத்தில் காயமடைந்துள்ளனர்.