

வரும் 20-ம் தேதி முடிவு அறிவிப்பு
சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் தரப்பிடம் தேர்தல் ஆணையம் நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில் வரும் 20-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆளும் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் தேர்வில் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கிற்கும் அவரது மகனும் மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இருதரப்பினரும் சைக்கிள் சின்னத்தை கோரி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். அதன்பேரில் இருதரப்பினரிடமும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
அகிலேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்தல் ஆணையம் முன்பு ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார். இதேபோல முலாயம் தரப்பிலும் வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர். இருதரப்பினரும் சுமார் 4 மணி நேரம் வாதாடினர்.
தேர்தல் ஆணையத்தில் முலாயங் சிங்கும் அவரது ஆதரவாளர்களும் ஆஜராகினர். ஆனால் அகிலேஷ் யாதவ் தேர்தல் ஆணையத்துக்கு வரவில்லை. அவரது பிரதிநிதியாக ராம்கோபால் யாதவ் எம்.பி. ஆஜரானார்.
சைக்கிள் சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நேற்று தனது முடிவை அறிவிக்கவில்லை. வரும் 20-ம் தேதி இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
‘பெரும்பான்மை எம்.பி., எம்எல்ஏக்கள் முதல்வர் அகிலேஷுக்கு ஆதரவு அளிப்பதால் சைக்கிள் சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்படும்’ என்று அகிலேஷின் வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த சுமன் ராகவ் தெரிவித்துள்ளார்.