

மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம், டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், வேட்பாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள செலவு தொகையின் உச்சவரம்பை உயர்த்துமாறு பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு பா.ஜ.க. மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரத்தில் ஏதாவது சிறிய தவறு இருந்தால் கூட தள்ளுபடி செய்து விடுகிறார்கள். வேட்புமனுவை அந்த அளவுக்கு நுணுக்கமாக ஆய்வு செய்யாமல், குற்ற வழக்குப் பதிவு, சொத்து விவரம் போன்றவை தொடர்பாக தவறான தகவல்கள் இருந்தால் மட்டுமே தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஊடகங்களில் வெளியிடப்படும் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கத் தேவையில்லை. ஆனால், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடுவதை எதிர்க்கிறோம். கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் கொண்டு வரக் கூடாது. ஏனெனில், இது ஜனநாயக அரசியலுக்கு எதிரானது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆன்லைன் முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேர்தல் சமயங்களில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்வதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சோதனை நடைமுறையை மாற்ற வேண்டும். வேட்பாளர்கள் செலவு தொகையின் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.
வேட்பாளர் செலவு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. திமுக உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகளும் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பங்கஜ் குப்தா கூறுகையில், “செலவு “உச்சவரம்பை உயர்த்த வேண்டாம்” என்றார்.