

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் ஆலய தேர்த் திருவிழாவை முன்னிட்டு, மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் 100 மணல் சிற்ப தேர்களை உருவாக்கியுள்ளார். இவை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
பத்ம விருது வென்றுள்ள சுதர்சன் பட்நாயக் ஏற்கெனவே 20 உலக சாதனைகளைப் படைத்துள்ளார். ஆண்டுதோறும் ரத யாத்திரையை முன்னிட்டு தேர் சிற்பங்களை மணலில் வடிவமைத்து வருகிறார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “100 மணல் சிற்ப தேர்கள் வடிவமைப்பு உலக சாதனை படைத்துள்ளது. லிம்கா சாதனைப் புத்தகத்திலிருந்து அதிகாரப்பூர்வ உறுதிச் சான்றிதழும் வந்துவிட்டது. சுற்றுலாப் பயணிகளை இந்த மணல் தேர்கள் ஈர்க்கின்றன. 2,500 சதுர அடியில், 800 பை மணல்களைப் பயன்படுத்தி 100 தேர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனது பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்களின் உதவியுடன் மூன்று நாட்களில் 20 மணி நேரம் செலவிட்டு இந்த தேர்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்றார்.
16-ம் நூற்றாண்டில் பலராம் தாஸ் என்பவரால் மணல் சிற்பக்கலை தோற்றுவிக்கப்பட்டதாக கூறப் படுகிறது. ஜெகந்நாதரின் தீவிர பக்தரான பலராம் தாஸை தேரிழுக்க அனுமதிக்கவில்லை. அப்போது பூரி கடற்கரைக்குச சென்ற பலராம் தாஸ் அங்கு மணலால் தேரை உருவாக்க, அது நிஜமான தேரைப் போல நகர்ந்து சென்றது. அதே சமயம் கோயிலின் நிஜமான தேர் நகராமல் நின்று விட்டது.
தகவலறிந்த ராஜா பிரதாப்ருத்ரா, பலராம் தாஸிடம் சென்று மன்னிப்புக் கோரி, நிஜமான தேரை இழுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததாக செவிவழிக் கதை நிலவுகிறது.