

பஞ்சாப்பில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து, நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
பாஜக சார்பில் அமிர்தசரஸ் தொகுதி எம்பியாக பதவி வகித்து வந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. கடந்த 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட அவர் விரும்பினார். ஆனால் பாஜக அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த சித்து பாஜகவில் இருந்து கடந்த ஆண்டு விலகினார்.
தொடர்ந்து சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுரும் தனது பஞ்சாப் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸில் ஐக்கியமானார். இதையடுத்து சித்துவும் விரைவில் காங்கிரஸில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால் அக்கட்சியில் அவர் இணையக்கூடும் என பேசப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த சித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் முன்னாள் அகாலி தள எம்எல்ஏ பர்கத் சிங்கும் காங்கிரஸில் இணைந்தார். பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரும் 4-ம் தேதி தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.