சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவை ‘இந்துத் துறவி’ என்று கூறி சர்ச்சையில் சிக்கிய கேரள பாஜக

சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவை  ‘இந்துத் துறவி’ என்று கூறி சர்ச்சையில் சிக்கிய கேரள பாஜக
Updated on
1 min read

கேரளாவின் மிகப்பெரிய சாதி ஒழிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவை ‘இந்துத் துறவி’ என்று வர்ணித்து கேரள பாஜக மீண்டும் சர்ச்சைகளுக்குள் சிக்கியுள்ளது.

ஸ்ரீ நாராயண குரு குறித்து முகநூலில் கேரள பாஜக குறிப்பிடும்போது, “உலகிற்கு கேரளாவின் மிகப்பெரிய பங்களிப்பு இந்து சன்யாசி ஸ்ரீ நாராயணகுருவும் அவரது போதனைகளும்” என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே ஓணம் பண்டிகை குறித்த பாஜக-வின் விளக்க சர்ச்சை அடங்காத நிலையில் தற்போது ஸ்ரீ நாராயண குரு பற்றிய இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது கேரள பாஜக.

ஸ்ரீ நாராயணகுருவை ‘மிகப்பெரிய புரட்சியாளர்’ என்று கூறியுள்ள பாஜக பதிவு, பண்டைய இந்து மூடநம்பிக்கைகளை மறுத்து இந்து மதத்தை சீர்திருத்தியவர் ஸ்ரீநாராயண குரு என்று வர்ணித்துள்ளது.

ஸ்ரீ நாராயண குருவின் சிந்தனைகள் அனைத்தும் தாய்நாட்டையும் அதன் பண்பாட்டையும் விமர்சித்த ‘போலி முற்போக்குவாதி’களுக்கு பாடங்களை கற்பித்துள்ளது, என்று முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, இந்து சமய சட்டகங்களுக்குள் இருந்த படியே இந்து மதத்தை சீர்திருத்த நாராயண குரு பணியாற்றினார் என்றும், சாதியை மறுத்து தாழ்த்தப்பட்ட மற்றும் நலிவுற்ற பிரிவினரின் ஆன்மீக விடுதலை, சமூக சமத்துவம் மற்றும் முன்னேற்றத்த்திற்கு உண்டான சீர்த்திருத்த இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ஸ்ரீ நாராயண குரு என்று கூறியுள்ளது அந்தப் பதிவு.

கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சுதீரன், கூறும்போது, “மரியாதைக்குரிய சமூக சீர்த்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவை ‘இந்து சன்யாசி’என்று கூறுவது அவருக்கு ஏற்படுத்திய அவமதிப்பாகும்” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறும்போது, குருவை இந்து சன்யாசி என்று கூறியதன் மூலம் காவிக்கட்சி தனது மத அரசியலை பரப்புகிறது என்று சாடினார். மேலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சீர்திருத்தவாதியை இந்து சன்யாசி என்று அடையாளப்படுத்துவதன் மூலம் அவரையும் சங் பரிவாருக்குள் கொண்டு வர முயற்சி செய்யப்படுகிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in