

நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நீடிப்பதால் வீடு, கார், விவசாயக் கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். வங்கிகள், ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன. இதன்காரணமாக நாடு முழுவதும் பணப் புழக்கம் குறைந் துள்ளது.
எனவே வீடு, கார் மற்றும் விவசாயக் கடன்களை திரும்ப செலுத்துவதில் பொது மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கடன் தவணையை திருப்பிச் செலுத்த 60 நாட்கள் அவகாசம் அளிக்கப் படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நவம்பர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான தவணையை திரும்ப செலுத்து வதற்கு மட்டுமே 2 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. ரூ. 1 கோடி மற்றும் அதற்கும் குறைவான கடன் தொகைக்கான தவணையை திரும்ப செலுத்துவோருக்கு மட்டுமே இந்த கால அவகாசம் பொருந்தும்.
குறித்த கால கடன், வணிகக் கடன், தனி நபர் கடன், சொத்தின் பேரில் பெறப்பட்ட கடன் ஆகிய வற்றுக்கான தவணைக்கும் இது பொருந்தும். பொதுத்துறை, தனியார் வங்கிகள் மட்டுமின்றி அனைத்து வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் (என்பிஎப்சி) பெறப் பட்ட கடனுக்கும் இச்சலுகை பொருந்தும். வீட்டுக் கடன் மற்றும் விவசாயக் கடனுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செலுத்த வேண்டிய தவணைத் தொகைக்கான கால அவகாசம் மட்டும் நீட்டிக்கப்பட்டுள் ளது. இதை வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் உணர்ந்து அதற்கேற்ப வாடிக்கை யாளர்களுக்கு சலுகை அளிக்க வேண்டும். இந்த காலகட்டத்திலான கடன் நிலுவையை வாராக் கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது. இந்த நடைமுறைகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் வங்கிகளின் வழக்கமான காசோலை பரிவர்த்தனை பணிகள் முடங்கியுள்ளன. மேலும் பலருக்கு பணம் வர வேண்டிய இடத்திலிருந்து கிடைக்காத சூழல் நிலவுகிறது. வாரத்துக்கு வங்கிகளில் எடுக்கக் கூடிய பணத்தின் அளவு ரூ.24 ஆயிரமாக உயர்த்தியபோதிலும் பலரால் தவணையை திரும்ப செலுத்த முடியாத சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான கடன்களுக்கான தவணை மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் செலுத்த வேண்டியிருக்கும். எனவே இந்த சலுகை மிகவும் உதவியாக இருக்கும் என திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவன மூத்த அதிகாரி ஹர்ஷில் மேத்தா தெரிவித்தார்.
பழைய ரூ.500 நோட்டில் விதை வாங்க விவசாயிகளுக்கு அனுமதி
விவசாயிகளின் சுமையை குறைக்க மத்திய அரசு நேற்று புதிய அறிவிப்பு வெளியிட்டது. அதில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விதைகள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், தேசிய, மாநில விதைகள் கழகங்கள், மத்திய, மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் உரிய அடையாள அட்டையை காண்பித்து பழைய 500 ரூபாய்க்கு விதைகள் பெற்றுக் கொள்ளலாம் என நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.