

அந்தமான் - நிக்கோபார் தீவுகளை இன்று (புதன்கிழமை) புயல் தாக்கிய நிலையில், இப்புயல் அடுத்த 24 முதல் 72 மணி நேரத்தில் ஆந்திரம், ஒடிசாவை நோக்கிச் செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 950 கி.மீ. தொலைவில் இப்புயல் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட அந்தமான் கடல்பகுதியில் செவ்வாய்க்கிழமை கடுமையான காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புயல் அந்தமான், நிக்கோபார் தீவுகளை தாக்கியதால் இன்று மாலை கடுமையான மழை பெய்தது. அப்போது மணிக்கு 78 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
இப்போது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி திரும்பியுள்ள புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த புயலாக மாறும். அக்டோபர் 12-ம் தேதி நள்ளிரவில் கிழக்கு கடற்கரைப் பகுதியை இப்புயல் தாக்கும்.
வட ஆந்திரம், ஒடிசா இடையே கலிங்கபட்டணம் - பாரதீப் இடையே புயல் கடந்து செல்லும். அப்போது 175 முதல் 185 கி.மீ. வேகம் வரை காற்று வீசும். அப்பகுதிகளில் கனமழை பெய்யும். கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், அந்தமான் கடல்பகுதி, வங்காள விரிகுடா பகுதிக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் எச்சரிக்கையை அடுத்து ஒடிசாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தசரா விடுமுறையில் சென்ற அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.