

997 ஏக்கர்கள் நிலத்தை விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்த சிபிஎம் ஆட்சி தற்போது நில அபகரிப்புக்கு 1894 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் போதாமைகளே காரணம் என்று கூறியுள்ளது
இது குறித்து சிபிஎம் பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “1894-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலமே நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நேரத்தில் இந்த சட்டம் மட்டுமேதான் இருந்தது, இந்த சட்டம் விவசாயிகளின் நலன்களை போதிய அளவில் பாதுகாக்கவில்லை.
2011-ம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிங்குர் விவகாரத்தினால் ஏற்பட்ட நிர்வாக மற்றும் அரசியல் குளறுபடிகள் பெருத்த சேதத்தை கட்சிக்கு ஏற்படுத்தியது என்று கட்சியின் மத்திய கமிட்டி தவறை அங்கீகரித்தது.
திட்டம் கைவிடப்பட்ட பிறகு, அதாவது திரிணமூல் காங்கிரஸ் கட்சி இழப்பீடு மறுக்கும் விவசாயிகளுக்கு நிலங்களை திருப்பி அளிக்கும் மசோதாவைக் கொண்டு வந்தவுடன் அனைத்து விவசாயிகளுக்கும் நிலங்களை திருப்பி அளிப்பதற்கு கட்சி ஆதரவே தெரிவித்தது.
மேலும் 2013-ம் ஆண்டு ‘நில கையகப்படுத்தல், மறுவாழ்வு, மறுகுடியமர்த்தலில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டம்’ கொண்டு வந்த பிறகு விவசாயிகளின் நலன்களுக்காக தொடர்ந்து செயல்படுவதை கட்சி உறுதி பூண்டது”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.