

இரண்டு கோடி லஞ்சம்பெற்ற புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஆம் ஆத்மி அரசில் தண்ணீர், சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. இவர் சனிக்கிழமை அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கபில் மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து முதல்வர் கேஜ்ரிவால், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன் வைத்தார்.
கேஜ்ரிவாலிடம் சத்யேந்திர ஜெயின் ரூ.2 கோடி கொடுப்பதை பார்த்ததகாவும், அதை பார்த்த பிறகுதான் கபில் மிஸ்ரா வெளியேறியதாகவும் இதுகுறித்த விவரங்களை ஆளுநர் அனில் பைஜாலிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கபில் மிஸ்ரா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், ரூ.2 கோடி விவகாரம் குறித்து சிபிஐ அல்லது ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்கவும் தயாராக இருப்பதாகவும் கபில் மிஸ்ரா தெரிவித்தார்.
இந்த நிலையில் டெல்லி ஆளுநர் அரவிந்த் கேஜிரவால் மீதான புகாரை ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பான விசாரணையை ஏழு நாட்களுக்கு முடிக்குமாறு கோரியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் அரவிந்த கேஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசரணையை தொடங்கியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கேஜ்ரிவால் தரப்பில் எந்தவொரு விசாரணைக்கும் தயாராகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.