

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நமது அன்றாட உணவில் எப்போதோ இடம் பிடித்துவிட்டன. இதற்கு இதுவரை யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மரபணு மாற்றப்பட்ட கடுகை மட்டும் கடுமையாக எதிர்க்கின்றனர். இதுதொடர்பான கற்பனை பயங்களை உடைத்தெறிவது அவசியம்.
கடுகு விவகாரத்தை அலசி ஆராய என்னுடைய டெல்லி பல்கலைக்கழக பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். இங்கு மரபணு பொறியியல் பிரிவு செயல்படுவது டெல்லிவாசிகளில் பலருக்கும் தெரியாது. நாட்டின் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு இந்த மையம் முன்னோடியாக செயல்படுகிறது. சுமார் 10,000 சதுர அடியிலான ஆய்வு அறையில் 24 ஆராய்ச்சியாளர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர். அதன் தலைவர் பேராசிரியர் தீபக் பென்டல் நம்மிடம் தீர்க்கமாக, நிதானமாக, எளிமையாகப் புரியும் வகையில் பேசுகிறார்.
கற்பனை பயங்கள்
‘மரபணு மாற்ற பயிர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் கற்பனை பயங்கள் அதிகம் உள்ளன. முதலில் மரபணு மாற்றம் (ஜி.எம்.) என்று அழைப்பதே தவறு. அதற்குப் பதிலாக மரபணு பொறியியல் (ஜி.இ.) என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். எங்களது 32 ஆண்டு கால ஆராய்ச்சியின் பயனாக ‘தாரா மஸ்டர்ட் ஹைபிரிட் 11’ ரக கடுகை கண்டுபிடித்துள்ளோம். இதற்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி வழங்கிவிட்டது. இது முற்றிலும் பாதுகாப்பானது.
கடந்த 2002-ம் ஆண்டிலேயே இந்த கடுகு விதையை உருவாக்கிவிட்டோம். எனினும் எதிர்ப் பாளர்களை திருப்திபடுத்த பல ஆண்டுகளாக ஓய்வில்லாத போராட்டத்தை நடத்தி வருகிறோம். மரபணு மாற்ற பயிர் விவகாரம் உணர்ச்சிபூர்வமாக கையாளப்படுகிறது. இந்த விவகாரத்தில் எழுந்துள்ள கற்பனை பயங்கள் இடது, வலதுசாரிகளைக் கூட ஒன்றிணைத் துள்ளது.
பொதுவாக, மரபணு மாற்றப் பயிர் விதைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்ற எண்ணம் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதன்மூலம் இந்திய வேளாண்மையை வெளிநாட்டு சக்திகள் ஆட்டிப் படைக்கும், இந்திய விவசாயிகளை வெளிநாட்டினர் அடிமையாக்கிவிடுவர் என்ற பயம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாங்கள் உருவாக்கியுள்ள கடுகு முழுக்க முழுக்க உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அரசு சார்பு ஆய்வகத்தில் உள்நாட்டு ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் சமையல் எண்ணெய் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் வித்துகள் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. தேசிய அளவில் எண்ணெய் வித்துகள் தேவையில் கடுகு 3-ம் இடத்தில் உள்ளது. அரசின் முயற்சிகளால் கடுகு உற்பத்தி தற்போது 30 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும் உள்நாட்டுத் தேவை இன்னமும் பூர்த்தியாகவில்லை. நாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய ரக கடுகை பயன்படுத்தினால் விளைச்சல் அதிகரிக்கும், தேவைகள் பூர்த்தியாகும்’ என்று பேராசிரியர் தீபக் பென்டல் நீண்ட விளக்கமளித்தார்.
அமெரிக்காவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்ற பென்டல், போலந்தில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போதுதான் கடுகு ஆராய்ச்சியில் அவரது கவனம் திரும்பியது. போலந்து கடுகையும் இந்திய கடுகையும் இணைத்து புதிய வீரிய ரகத்தை உருவாக்க முயற்சி செய்தார். ஆனால் அது கைகூடவில்லை.
கடுகு செடி இருபால் தாவரம் என்பதால் தன் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. அயல் மகரந்த சேர்க்கையை அது ஏற்காது. இதற்கு முதலில் ஆண் மகரந்தத்தின் வீரியத்தைக் குறைத்து புதிய மகரந்தத்தை செலுத்த வேண்டும். இது பெரும் சவாலான பணி.
தீபக் பென்டலும் அவரது சக ஆராய்ச்சி யாளர்களும் இந்த சவாலை துணிச்சலாக ஏற்று புதிய கடுகு விதையை கண்டுபிடித்துள்ளனர். உலகளாவிய அளவில் 85 ஆயிரம் வகை கடுகு மரபணுக்கள் உள்ளன. டெல்லி பல்கலைக்கழக கடுகு ரகத்தில் பார்னேஸ், பார்ஸ்டார், பார் ஆகிய மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை 100 சதவீதம் தீங்கற்றவை என்று தீபக் பென்டலும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் உறுதி அளிக்கின்றனர்.
பேராசிரியர் பென்டல் தற்போது டெல்லி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள் ளார். ஆனால் தனது ஆய்வகத்தை விட்டு விலக அவர் தயாராக இல்லை. பதவிக் காலம் முடிந்ததும் மீண்டும் முழுநேர ஆராய்ச்சியாளராக ஆய்வகத்துக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.
புதிய ரக கடுகை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வீர்களா என்று பென்டலிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். அவரும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்த கருத்துடன் தலையசைத்து ஆமோதித்தனர். மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்த நாள் முதல் புதிய கடுகை பயன்படுத்துவோம், அதனால் எந்த தீங்கும் இல்லை. இதை விஞ்ஞானப்பூர்வமாக ஏற்கெனவே நிரூபித்துள்ளோம் என்றனர்.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் தயாரிக்கப்பட்ட பல லட்சம் கோடி உணவு வகைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதில் கனோலா என்ற மரபணு மாற்றப்பட்ட கடுகு விதையும் ஒன்று. இது 1996-ல் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ஆண்டுதோறும் 4 லட்சம் டன் கனோலா கடுகு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுகுறித்து யாரும் எதுவுமே சொல்வதில்லை. அதேபோல 10 மடங்கு அதிகமாக மரபணு மாற்றப்பட்ட எண்ணெய் வித்துகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதன்மூலம்தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் வகைகள், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.
அமெரிக்கா, கனடா, லத்தின் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், சீனா ஆகியவை மரபணு மாற்ற பயிர்களுக்கு எப்போதோ மாறிவிட்டன. ஐரோப்பிய யூனியன் நாடுகள் மட்டுமே ஏற்க மறுத்து வருகின்றன. அவை பணக்கார நாடுகள். அதனால் அவர்களுக்கு மரபணு மாற்ற பயிர்கள் தேவையில்லை.
யோகா குரு பாபா ராம்தேவ் பசுவின் நெய், பசும்பால் மட்டுமே அருந்துமாறு மக்களை அறிவுறுத்தி வருகிறார். நமது நாட்டின் பெரும்பான்மை பசுக்கள் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், தானியங்களையே உணவாக உட்கொண்டு பால் சுரக்கின்றன. அந்த உண்மை மறைக்கப்படுகிறது.
மரபணு மாற்றப் பயிர்களை கண்டுபிடிப்பதில் நம்மைவிட சீனா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. உலகின் 3-வது பெரிய மரபணு மாற்ற ஆராய்ச்சி நிறுவனமான சென்ஜெட்டாவை ரூ.2.9 லட்சம் கோடி கொடுத்து வாங்க அந்த நாடு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
டெல்லி பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கடுகு ரகத்தை வாங்கவும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. காரணம் இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. அதுபோல கடுகின் மரபணு மாறினாலும் அதன் காரம் குறையாது, எந்தத் தீங்கும் ஏற்படாது என்கிறார் பேராசிரியர் தீபக் பென்டல்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com தமிழில் சுருக்கமாக: சு.கோயில் பிச்சை