

உத்தரப் பிரதேசம் மதுரா கலவரத் துக்கு காரணமான போஸ் சேனா அமைப்பினர் முகாமிட்டிருந்த ஜவஹர் பாக் பகுதி முழு வதும் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. அங்கு 8 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆயுத பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
மதுராவில் ஜவஹர் பாக் பகுதியில் 260 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த போஸ் சேனா அமைப்பினரை வெளியேற்ற லக்னோ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2-ம் தேதி போலீஸார் அங்கு சென்றபோது இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
போலீஸ் எஸ்.பி. முகுல் துவிவேதி, இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் ஆகியோரை ஆக்கிரமிப்பாளர்கள் சுட்டுக் கொன்றனர். மேலும் 23-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயம் அடைந்தனர். பதிலுக்கு போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த மோதலில் 2 போலீஸார் உட்பட 24 பேர் பலியானதாக முதல்நாள் அறிவிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மருத்துவ மனையில் 5 ஆக்கிரமிப்பாளர்கள் உயிரிழந்தனர். எனவே பலி எண்ணிக்கை நேற்று 29 ஆக உயர்ந்தது.
வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
போஸ் சேனா அமைப்பினர் ஆக்கிரமித்திருந்த ஜவஹர் பாக்கின் 260 ஏக்கர் நிலப் பகுதியையும் போலீஸார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். அப்பகுதி முழுவதும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவை படிப் படியாக அகற்றப்பட்டு வருகின்றன.
முகாமில் வாழ்ந்த சிறார்களுக்கு 8 வயது முதலே துப்பாக்கி, வெடிகுண்டுகளை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. போலீ ஸாருக்கு எதிரான தாக்குதலின் போது சிறார்கள், பெண்களும்கூட ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் கூறியபோது, எங்களைப் பொறுத்தவரை போஸ் சேனா தலைவர் ராம் விருக் ஷா யாதவ்தான் சுபாஷ் சந்திரபோஸ். அவர் இந்தியாவை விடுவிப்பார் என்று நம்பினோம் என்றார்.
அங்கிருந்து கலவரத்தில் மீட்கப்பட்ட குழந்தைகள் சிறார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விசா ரணைக்குப் பிறகு அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படு வார்கள். பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடர்ந்து காப்பகத் திலேயே வளர்க்கப்படுவார்கள் என்று உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லிக்கு கடத்தல்
மதுராவின் ஜவஹர் பாக் பகுதியை ஆக்கிரமித்திருந்த போஸ் சேனா அமைப்பினரிடம் இருந்து துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ஏராளமான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனவே மதுராவில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ஆயுதங்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி டெல்லி, உத்தரப் பிரதேச எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நிதிஷ்குமார் கேள்வி
பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது:
மதுரா கலவரம் மிகவும் கவலைக்குரியது. பல மாதங் கள் வரை ஆக்கிர மிப்பாளர்கள் அங்கு தங்குவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது ஆச்சரியமாக உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பாளர்களின் கோரிக்கையும் வினோதமாக உள்ளது. உத்தரப் பிரதேச அரசு ஆக்கிரமிப்பாளர்கள் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இத்தனை மாதம் வரை அவர்களை அங்கு தங்க அனுமதித்ததே பெரும் தவறு. இப்படியொரு சம்பவம் நடக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.