

ஜம்முவில் தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த பயங்கரத் தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள், 4 காவலர்கள் உள்பட 12 பேர் பலி பலியாகினர்.
ராணுவ உடை அணிந்து காவல் நிலையத்துக்குள்ளும், ராணுவ நிலையிலும் தீவிரவாதிகள் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், ஜம்மு - காஷ்மீரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக ஜம்மு போலீஸ் வெளியிட்ட முதற்கட்டத் தகவலில், கத்துவா - ஜம்மு இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், ஒரு லாரியை மடக்கிய மூன்று தீவிராவதிகள், அதில் இருந்த டிரைவரையும், மற்றொருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டு வாகனத்தைக் கடத்தியுள்ளனர்.
பின்னர், ராணுவ உடையை அணிந்துகொண்ட அவர்கள், காலை 6.40 மணியளவில் ஹிராநகர் காவல் நிலையத்துக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே 4 காவலர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஜம்முவின் சம்பா மாவட்டத்தையொட்டியுள்ள ராணவ நிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 6 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் தொடர்வாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 11 ஆண்டு கால ஜம்மு வரலாற்றில், இதுவரை நிகழ்ந்திடாத தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய ஹிராநகர் காவல் நிலையம், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து வெறும் 5 கிலோ மீட்டர் தூரத்தில்தான் உள்ளது என்பது கவனத்துக்குரியது.