

இந்திய மீனவர்களை சுட்டுக் கொலை செய்த மாலுமி மசிமிலியானோ லடோரின் ஜாமீன் நிபந்தனைகளில் திருத்தம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரள கடலோரப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இருவரை கடந்த 2012, பிப்ரவரி 15-ம் தேதி இத்தாலி கப்பலில் வந்த மாலுமிகள் சுட்டுக் கொலை செய்தனர். விசாரணையில் கடற் கொள்ளையர்கள் என நினைத்து மீனவர்களை கொன்றதாக மாலுமிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சூழலில் மாலுமி சல்வடோர் கிரோனுக்கு வழங்கப்பட்ட அதே ஜாமீன் நிபந்தனைகளை, மற்றொரு மாலுமியான லடோருக்கும் உச்ச நீதிமன்றம் விதிக்க வேண்டும் என்றும், சர்வதேச நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரிக்கும் உரிமை இந்தியாவுக்கா? அல்லது இத்தாலிக்கா? என முடிவாகும் வரை, லடோர் இத்தாலியிலேயே தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி புதிய மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஏ.ஆர்.தவே மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது லடோர் சார்பில் ஆஜரான கே.டி.எஸ்.துள்சி உள் ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள், செப்டம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதால், அவசர வழக்காக கருதி இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என வாதாடினர்.
இதைத் தொடர்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அடுத்த விசா ரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.