

மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் பலியான 25 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ காம்பீர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான வீரர்களின் புகைப்படங்களைக் கண்டு நிலை குலைந்து போனேன். இறந்த சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளுக்கான செலவை நான் ஏற்கிறேன். இதற்கான பணியை எனது குழுவினர் ஆரம்பித்து விட்டனர். விரைவில் இது தொடர்பாக பகிர்வேன்" என்றார்.
முன்னதாக மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் மண்டலத்துக்குட்பட்ட சுக்மா மாவட்டம், சின்டகுபா அருகே உள்ள கலாபதர் வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், சிஆர்பிஎப் 74-வது படைப் பிரிவைச் சேர்ந்த 99 வீரர்கள் முகாமிட்டிருந்தனர்.
கடந்த திங்கட்கிழமையன்று மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியதில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர். இவர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.