Last Updated : 12 Sep, 2016 03:26 PM

 

Published : 12 Sep 2016 03:26 PM
Last Updated : 12 Sep 2016 03:26 PM

காஷ்மீரில் பக்ரீத் நாளில் முடங்கி கிடக்கும் இயல்பு வாழ்க்கை

பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் நிலையில், தொடர்ந்து 66-வது நாளாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரின் சில நகரங்களுக்கும், ஸ்ரீநகரின் மூன்று காவல் நிலையங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கந்தர்பால், குப்வாரா, பாராமுல்லா, புட்காம், ஷோபியன், குல்காம், புல்வாமா மற்றும் அனந்த்நாக் பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதைத் தவிர ஸ்ரீநகர் பகுதிக்குட்பட்ட கன்யார், நொவாட்டா, குஞ்ச் ஆகிய காவல் நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் கலவரம் ஏற்பட்டது. இதில் பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் நடந்த சண்டையில் பொதுமக்கள் பலியாகினர்.

அதற்குக் கண்டனம் தெரிவித்து பிரிவினைவாதக் குழுவினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.

பக்ரீத் பெருநாளான இன்றும் (திங்கள்) கடைகள், அலுவலகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

பிரிவினைவாதிகள் தங்கள் முழு அடைப்புப் போராட்டத்தை செப்டம்பர் 16 வரை நீட்டித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிலையங்களும் திறக்கப்படவில்லை. ஸ்ரீநகரில் சில தனியார் வாகனங்களையும் ஆட்டோ ரிக்‌ஷாக்களையும் காண முடிந்தது.

பள்ளத்தாக்கில் சில பேக்கரிகளும், மட்டன் கடைகளும் பக்ரீத் பெருநாள் முன்னிட்டு திறந்திருந்தன. அவற்றில் சிறியளவிலான மக்கள் கூட்டத்தையும் காண முடிந்தது.

காஷ்மீர் வன்முறையால் 2 காவலர்கள் உட்பட 76 பேர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x