

சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதும் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் வரிசையில் நிற்பதும் புதிதல்ல. ஆனால், இந்த சீசனில் கேரள போலீஸார் நடந்துகொள்ளும் விதம் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலையில் வழக்கமாக, சந்தனம் துலங்கும் சாந்தமான முகத்துடன்தான் போலீஸைக் காணமுடியும். கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் ஆகட்டும்.. பக்தர்களை வழிநடத்துவதில் ஆகட்டும்.. கொஞ்சம்கூட முகம் சுளிக்கமாட்டார்கள். ஆனால், இந்த ஆண்டில் கேரள போலீ ஸின் நடவடிக்கைகளில் பெருத்த அளவில் மாற்றம் தெரிந்ததை பக்தர் கள் கண்கூடாகப் பார்த்தார்கள்.
இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருந் தது. வழக்கமான பாணியில் அவர்களை போலீஸார் அனு மதித்திருந்தால் நெரிசலையும், வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்க நேர்ந்ததையும் தவிர்த்திருக்க முடியும். ஆனால், தேவையில்லாமல் பம்பையிலேயே பக்தர்களை தேக்கி வைத்து, அனுப்பியது பல சங்கடங்களை ஏற்படுத்திவிட்டது.
கடந்த 6-ம் தேதி சபரிமலையில் தாங்கள் பட்ட அவதிகள் குறித்து சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கூறியதாவது:
பம்பையிலேயே போலீஸார் கேட் அமைத்து, கொஞ்சம் கொஞ்சம் பேராகத்தான் அனுப்பி னர். பம்பையில் இருந்து சுமார் 200 அடி தூரத்தில் உள்ள கன்னிமூல கணபதி கோயிலை சென்றடைவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. போலீஸார் வேண்டுமென்றே கூட்டத்தை சேரவிட்டு பின்னர் அனுப்புகின்றனர். இதனால்தான், கூட்டமும் நெரிசலும் உருவானது.
சபரிபீடத்துக்கும் ‘மரக்கூட்டம்’ என்ற இடத்துக்கும் நடுவே உள்ள கூண்டுகளில் பக்தர்களை அடைக்க ஆரம்பித்தனர். சிறிய நுழைவாயில் உள்ள கூண்டுக்குள் பக்தர்கள் முண்டியடித்து சென்ற தால் நெரிசல் ஏற்பட்டது. ‘சாமியே சரணம் ஐயப்பா’ என முழக்கம் கேட்கவேண்டிய இடத்தில், ‘ஐயோ.. அம்மா..’ என்ற அலறலைக் கேட்க நேர்ந்தது. வெகுநேரம் வரை கூண்டு திறக்கப்படாததால், குழந்தைகளும் பெரியவர்களும் மூச்சுத்திணறால் அவதிப்பட்டனர்.சபரிமலையில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் தரிசனத்துக்கு அதிக பட்சமாக 3 அல்லது 4 மணி நேரம்தான் ஆகும். ஆனால், இந்த முறை 10 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்துதான் ஐயப்பனை தரிசிக்க முடிந்தது’’ என்றனர் பக்தர்கள்.
திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுடன் கேரள போலீஸுக்கு சமீபகாலமாக கருத்து வேறு பாடான சூழல் நிலவுவதாகவும் அதனால்தான் போலீஸார் அலட்சியமாக நடந்து கொள்வ தாகவும் கூறப்படுகிறது.
பயன்படாத ஆன்லைன் புக்கிங்
சபரிமலைக்கு வரும் பக்தர்கள், வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவு சேவையை கேரள போலீஸார் கடந்த சில ஆண்டுகளாக அமல்படுத்தி வருகின்றனர். ஆன்லைனில் புக்கிங் செய்யும் பக்தர்கள், வரிசையில் நிற்காமல் தனி பாதையில் பதினெட்டாம்படிவரை அனுமதிக்கப்படுவர்.
கடந்த 6-ம் தேதி கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென ஆன்லைன் டிக்கெட்களை அனுமதிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். இதனால், ஆன்லைன் டிக்கெட்டுடன் வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். அவர்களும் பொது வரிசையிலேயே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.