Published : 25 Jul 2016 10:00 AM
Last Updated : 25 Jul 2016 10:00 AM

பாரதிய ஜனதா தலித் விரோத கட்சி: மாயாவதி குற்றச்சாட்டு

பாரதிய ஜனதா தலித் விரோத கட்சி என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் அண்மையில் அளித்த பேட்டியில், பாலியல் தொழிலாளியைவிட மாயாவதி தரக்குறைவானவர் என்று விமர்சனம் செய்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தயாசங்கரின் கட்சிப் பதவியை பாஜக பறித்தது. உ.பி போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே பகுஜன் சமாஜ் தலைவர்கள் தயாசங்கரின் தாயார், மனைவி, மகள் குறித்து அவதூறாகப் பேசியதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தயாசங்கர் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் மாயாவதி உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, லக்னோவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தயா சங்கரை பாஜகவில் இருந்து நீக்கியது போதுமானது அல்ல. அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

தயாசங்கரை காப்பாற்ற பாஜக முயற்சிக்கிறது. அந்த கட்சி அளிக்கும் அழுத்தம் காரணமாக ஆளும் சமாஜ்வாதி கட்சி தயாசங்கரை கைது செய்யாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மட்டு மன்றி நாடு முழுவதும் தலித்துகளுக்கு விரோதமாக பாஜக செயல்படுகிறது. குஜராத் மாநிலம் உனாவில் 4 தலித் இளைஞர்களை பாஜகவினர் அடித்து உதைத் துள்ளனர். ஆனால் இதுகுறித்து பிரதமர் மவுனம் காத்து வருகிறார். இதன்மூலம் அந்த கட்சி தலித் விரோத கட்சி என்பது உறுதியாகியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x