

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அறிவித்திருந்த 'சங்கல்ப திவாஸ்' போராட்டத்துக்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
அயோத்தியில் வரும் 18 ஆம் தேதி நடப்பதாக இருந்த இந்தப் போராட்டம், திட்டமிட்டபடி நடந்தால் வகுப்புக் கலவரம் மூளும் என்ற அச்சத்தில் பாதுகாப்பைக் காரணம் காட்டி, உத்தரப் பிரதேச காவல்துறை தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறை சட்டம் ஒழுங்கு ஐ.ஜி. ஆர்.கே. விஷ்கர்மா கூறும்போது, “இந்தத் தடையை அமல்படுத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் 5 பேர், 10 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள், 50 உதவி ஆய்வாளர்கள், 10 பெண் உதவி ஆய்வாளர்கள், 300 காவலர்கள், ஆயுதப்படை மற்றும் நாசவேலை தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 10 படைப்பிரிவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்” என்றார்.
அண்மையில் முஸாபர் நகர் கலவரத்தில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. எனவே, மேலும் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கையைப் போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக வி.எச்.பி. செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா கூறும்போது, “குறிப்பிட்ட பிரிவினரைச் சாந்தப்படுத்துவதற்காக, இந்தத் தடையை விதித்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற மக்களின் உணர்வுக்கு உத்தரப் பிரதேச அரசால் தடை விதிக்க முடியாது. சங்கல்ப திவாஸ் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும்” என்றார்.