

இந்து மதத்தில் சிவனை துதிக்கும் வகையில் ‘ஹர ஹர சங்கரா‘ என்று கூறுவதைப் போல, மோடியை பாராட்டும் வகையில் ‘ஹர ஹர மோடி’ என்று பாஜக தொண்டர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.
குறிப்பாக வாரணாசிக்கு, மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அவரை வரவேற்று இந்த கோஷத்தை தொண்டர்கள் எழுப்பினர்.
இது தொடர்பாக துவாரகை பீடம் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது: “இந்த விவகாரம் குறித்து தெரிய வந்ததும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை தொடர்பு கொண்டு எனது எதிர்ப்பைத் தெரிவித்தேன். இது போன்று கோஷமிடுவது இறைவன் சிவனை அவமதிப்பது போலாகும். கடவுளை துதிப்பதற்கு பதிலாக தனிமனிதரை துதிப்பது இந்து மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது” என்று கூறினார்.
பாஜக தொண்டர்கள் இவ்வாறு கோஷமிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளார்.
தன்னைப் போற்றும் வகையிலான ‘ஹர ஹர மோடி’ கோஷத்தை தொண்டர்கள் பயன்படுத்தக் கூடாது என்று நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.- பி.டிஐ.