

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கிலிருந்து எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி 1992 டிசம்பர் 6-ம் தேதி இந்து அமைப்பினரால் இடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பலர் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. எனினும், அத்வானி, ஜோஷி மற்றும் 19 பேரை நீதிமன்றம் விடுவித்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதன்படி, நீதிபதி பி.சி.போஸ் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி ஆர்.எப்.நாரிமன் நீதிமன்றத்துக்கு வராத காரணத்தால் நாளை (இன்று) விசாரணை நடைபெறும் என நீதிபதி பி.சி.கோஷ் தெரிவித்தார். இந்த அமர்வில் நீதிபதி தீபக் குப்தாவும் இடம்பெற்றுள்ளார்.
இதனிடையே, வழக்கு விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அத்வானி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால் கோரிக்கை வைத்தார்.
முஸ்லிம் அமைப்புகள் மீது புகார்
இதனிடையே பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று கூறும்போது, “அயோத்தி பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்தது. ஆனால் முஸ்லிம் அமைப்புகள் இதற்கு தடை ஏற்படுத்துகின்றன. இதன்மூலம் இந்த விவகாரத்தை காலதாமதம் செய்ய முயற்சி செய்கின்றன” என்றார்.