

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடந்த கலவரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுரா அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில் கடந்த 2-ம் தேதி சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது, ஆக்கிரமிப் பாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது. இதில் 2 போலீஸ் அதி காரிகள் உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞரும் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளருமான அஷ்வினி உபாத்யாய சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
உபாத்யாய தனது மனுவில், “சம்பவத்துக்கான அடிப்படை காரணம் மற்றும் உண்மையை கண் டறியவும் ஆக்கிரமிப்பாளர்களுடன் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரி கள் கொண்டிருந்த கள்ளத் தொடர்பை அறியவும் சிபிஐ விசாரணை அவசியமாகும்” என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.சி.கோஸ், அமிதவா ராய் ஆகி யோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கீதா லுத்ரா வாதாடும்போது, “மதுரா நகரில் பயங்கர வன்முறை வெடித்தது. இதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் குறித்து மாநில விசாரணை அமைப்புகள் முறையாக விசாரணை நடத்தவில்லை. எனவே உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.
ஆனால், மதுரா கலவரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும் இதுதொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் கூறும்போது, “இந்த விவகாரத்தில் மாநில விசாரணை அமைப்புகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று தாங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால் அதற்கு ஆதாரம் இல்லாமல் இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்றனர்.
நீதி விசாரணைக்கு உத்தரவு
இதனிடையே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, மதுரா கலவரம் குறித்து நீதி விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் நேற்று லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மதுரா கலவரம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி இம்தியாஸ் முர்தாஸா விசாரிப்பார். எத்தகைய சூழ்நிலையில் வன்முறை ஏற்பட்டது என விசாரணைக் குழு ஆராயும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருப்பதற்கான பரிந்துரைகளை அளிக்கும். விசாரணைக் குழு 2 மாதங்களில் அறிக்கை அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.