

இந்தோனேசியாவில் குர்தீப் சிங்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதர் எனக்கு அளித்த தகவலின்படி குர்தீப் சிங்குக்கு வியாழக்கிழமை இரவு தண்டனை நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குர்தீப் சிங்கை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றும் கடைசி நேர முயற்சிகள் அத்தனையும் தூதரக ரீதியாக நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு வியாழக்கிழமை இரவு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
மரண தண்டனை எதற்காக?
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம், மெஹத்பூர் நகரைச் சேர்ந்தவர் குர்திப் சிங் (48). அவர் கடந்த 2004-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாண்டன் பகுதியில் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருக்கு 2005-ம் ஆண்டில் உள்ளூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அந்த நாட்டு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்திலும் அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.
மேலும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பேர், நைஜீரியாவைச் சேர்ந்த 6 பேர், ஜிம்பாப்வேவைச் சேர்ந்த 2 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கும் போதை கடத்தல் வழக்குகளில் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் 14 பேரின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இந்தோனேசிய அரசிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதனை அந்த நாட்டு அரசு ஏற்கவில்லை.
இந்நிலையில், குர்தீப் சிங்கை மீட்க கடைசி நேர முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.