Last Updated : 29 Oct, 2014 11:40 AM

 

Published : 29 Oct 2014 11:40 AM
Last Updated : 29 Oct 2014 11:40 AM

நடிகர் ராஜ்குமார் நினைவிடம் நவம்பர் 29-ல் திறப்பு விழா: ரஜினிகாந்துக்கு அழைப்பு

பெங்களூரில் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் நினைவகத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா வரும் நவம்பர் 29-ம் தேதி திறந்து வைக்கிறார். இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட முக்கிய திரையுலகினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் ரோஷன்பெய்க் கூறியதாவது:

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் கலைச் சேவையை போற்றும் வகையில் கர்நாடக அரசு சார்பாக பெங்களூரில் நினைவகம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கண்டீரவா ஸ்டூடியோ வளாகத்தில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.7 கோடி மதிப்பில் அமைந்துள்ள இந்த நினைவகத்துக்கு, 'ராஜ்குமார் புண்ணிய ஸ்தலம்' என பெயர் சூட்டப்ப‌ட்டுள்ளது.

இங்கு 800 பேர் அமர்ந்து பார்க்க கூடிய திறந்தவெளி திரையரங்கம், சிறிய அளவிலான‌ குளம் மற்றும் அழகிய தோட்டம் அமைக் கப்பட்டுள்ளது.

நடிகர் ராஜ்குமாரின் 500-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களைக் கொண்டு நிரந்தர புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நினைவக‌த்தின் முகப்பில் ராஜ்குமாரின் மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நினைவகத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா வருகிற நவம்பவர் 29-ம் தேதி திறந்து வைக்கிறார். இவ்விழாவில் கலந்து கொள்ள நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமலஹாசன், சிரஞ்சீவி,மம்முட்டி,மோகன்லால் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்ப‌ப்பட்டுள்ளது.

அதே போல ராஜ்குமாருடன் நடித்த நடிகை சரோஜா தேவி, சவுகார் ஜானகி உள்ளிட்ட நடிகைகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறோம்.

தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ராஜ்குமாரின் நினைவக திறப்பு விழாவில் அவசியம் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிக்கு முதல்வர் சித்தராமையா தொலைபேசியிலும் அழைப்பு விடுத்திருக்கிறார்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x