

மகாராஷ்டிரா அமைச்சரவை மாற்றத்தால் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கும் அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் பதவி போட்டியில் அவரும் களத்தில் இருந்தார். இறுதியில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பொறுப்பேற்றார். பங்கஜா முண்டேவுக்கு நீர்வளம், ஊரக மேம்பாடு, மகளிர் - குழந்தைகள் நல மேம்பாடு ஆகிய துறைகள் அளிக்கப்பட்டன.
மகாராஷ்டிர அமைச்சரவை அண்மையில் மாற்றம் செய்யப் பட்டது. இதில் பங்கஜா முண்டே விடம் இருந்த நீர்வளத் துறை பறிக்கப்பட்டது.
இந்நிலையில் சிங்கப்பூரில் இன்று உலக நீர்வள மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கஜா பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. ஆனால் நீர்வளத் துறை பதவி பறிபோய் விட்டதால் சிங்கப்பூர் மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று ட்விட்டர் மூலம் அவர் அறிவித்துள்ளார்.
முதல்வர் பட்னாவிஸ் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அங்கிருந்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், சிங்கப்பூர் மாநாட்டில் பங்கஜா கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.