

பெங்களூரு ஒசூர் சாலையில் பேருந்தில் சென்ற ஒருவரை அவரது மனைவி காரில் துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சேர்ந்தவர் சாய்ராம் (53). இவரது மனைவி ஹம்சா (48). பெங்களூருவில் சொந்தமாக நிறுவனம் நடத்திவரும் சாய்ராம், இந்நகரில் உள்ள எச்.எஸ்.ஆர். லே அவுட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சாய்ராம் தனது நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க தனது மனைவியுடன் நேற்று முன்தினம் ஒசூர் சென்றார். மாலையில் பெங்களூரு திரும்பும் வழியில் ஆனேக்கலில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் மது அருந்தியாக தெரிகிறது.
வீடு திரும்பும் போது இருவருக் கும் வாய்த் தகராறு வலுத்துள்ளது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் பொம்மச்சந்திரா என்ற இடத்தில் சாலையோர தடுப்பின் மீது கார் மோதியது. அப்போதும் தொடர்ந்து சண்டையிட்ட ஹம்சா, காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து சாய்ராமை சுடப்போவதாக மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சாய்ராம் தப்பியோடி பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார்.
இதையடுத்து ஹம்சா காரில் பேருந்தை துரத்திச் சென்று சாய்ராமை மடக்கிப் பிடித்தார். ஒரு கட்டத்தில் தப்பியோடிய சாய்ராமை துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளார். இதில் இடுப்பில் 2 குண்டுகள் பாய்ந்து சாய்ராம் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் சாய்ராமை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், காரில் அமர்ந்திருந்த ஹம்சாவை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் பெங்களூரு ஒசூர் சாலையில் நேற்று முன்தினம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து ஹம்சா மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.