

டெல்லியில் நடந்த மாநகராட்சி தேர்தலில் 181 வார்டுகளில் வெற்றி பெற்று, 3 மாநகராட்சிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் ஆளும் ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கு கடந்த 22-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 272 வார்டுகளுக்கு நடந்த இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ், சுயேச்சைகள் சார்பில் 2,537 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தாமல் வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்துமாறு ஆளும் ஆம் ஆத்மி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது. எனினும் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமே தேர்தலை நடத்தியது.
இந்நிலையில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த பாஜக இறுதியில் 181 வார்டுகளில் வெற்றி பெற்று, 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. ஆம் ஆத்மி 48 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு பாஜக இந்த வெற்றியை அர்ப்பணித்துள்ளது.
பிரதமர் நன்றி
பிரதமர் மோடியும் டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த டெல்லி மக்களுக்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். மாநகராட்சி தேர்தல் வெற்றிக்காக அயராது உழைத்த பாஜகவினரையும் இந்த தருணத்தில் பாராட்டுகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, ‘‘டெல்லி மாநகராட்சி தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எதிர்மறை அரசியலை புறக்கணித்து, பிரதமர் மோடியின் தலைமைக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தோல்வி குறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நமது நாட்டின் ஜனநாயகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்கின்றன. இது கசப்பான உண்மை. இதை ஒருசிலர் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மை அது தான்’’ என்றார்.