Last Updated : 29 Oct, 2014 05:18 PM

 

Published : 29 Oct 2014 05:18 PM
Last Updated : 29 Oct 2014 05:18 PM

ஐ.எஸ். அமைப்பில் சேர முயன்ற தமிழக இளைஞர் ஐதராபாதில் கைது

ஐ.எஸ். அமைப்பில் இணைய முற்பட்ட தமிழகத்தை சேர்ந்த இளைஞர் உளவுத்துறை அதிகாரிகளால் ஐதராபாதில் கைது செய்யப்பட்டார்.

தொழில்நுட்ப வல்லுநரான முனாவாத் சல்மான் (30) என்ற தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஐதராபாதில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தனது பணியிலிருந்து விடுபட்ட அவர், சென்னையில் தங்கி இருந்தார். இந்த நிலையில் புதிய வேலையில் சேருவதாக கூறி சென்னையிலிருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்ற அவரை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஐதராபாதிலிரிந்து அரபு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இராக் நாட்டுக்கு செல்வதற்காக தயார் செய்யப்பட்ட விசா பறிமுதல் செய்யப்பட்டது.

ஐ.எஸ். அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த 6 மாதங்களாக இணையத்தில் விவரங்களை சேகரித்தது, அது தொடர்பான விஷயங்களில் சமூக வலைதளங்களில் ஆர்வம் செலுத்தி வந்ததை அடுத்து சல்மானின் நடவடிக்கைகள் உளவுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுப்புவதாக அமைந்தது. இதனை அடுத்து தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், ஐதராபாதிலிருந்து அரேபியா செல்ல முயன்றபோது சல்மான் உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சல்மானின் நடவடிக்கைகள் அனைத்தும் நல்ல முறையில் இருந்ததை அடுத்து, அவரது பெற்றோர்கள் மற்றும் நண்பர்களை கொண்டு சல்மானுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அவரிடத்தில் தற்போது மனமாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், முனாவாத் சல்மானின் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ள அதிகாரிகள், அவர் ஐ.எஸ். அமைப்பு குறித்து வலைதளங்களின் வழியே ஏற்பட்ட ஈர்ப்பினால் அதில் இணைய முயற்சித்தாகவும், அவருக்கும் அந்த இயக்கத்துக்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல கடந்த 22-ஆம் தேதி சிமி பயங்கரவாத இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய முஜாகுதீன் அமைப்பில் சேர முயற்சித்த ஐதராபாதை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆப்கான் புறப்பட இருந்த நிலையில் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x