

ஆதார் அட்டை வழங்கும் ஆணையத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பான இந்திய தேசிய அடையாள அட்டை வழங்கும் ஆணைய மசோதா சில திருத்தங்களுடன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
குளிர்காலக் கூட்டத்தொ டரில் இந்த மசோதா மக்களவையில் விவாதத்துக்கு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆதார் ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பதுடன் சட்டரீதியான பாதுகாப்பை அளிப்பதையும் மசோதா உறுதி செய்துள்ளது.
ஆதார் அட்டை வழங்கும் பணியை தேசிய அடையாள அட்டை வழங்கும் ஆணையம் முழுமையாகக் கண்காணிக்கும். ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்படும் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்போது சிறப்பு உத்தரவு மூலம் நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு 12 எண்களுடன் கூடிய ஆதார் அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆதார் அட்டை இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த வர்களுக்கும் அளிக்கப்படும். இது இந்தியக் குடிமகன்களுக்கான எந்த உரிமையுடனும் தொடர்புடையது இல்லை. எனெனில் ஆதார் அட்டை என்பது இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதை அடையாளம் காண வழங்கப்படுவது அல்ல. இந்தியாவில் வசிப்பவர் என்பதை அடையாளம் காணவே வழங்கப்படுகிறது. இது விருப்பத்தின் பேரில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய அட்டைதானே தவிர, கட்டாயமாகப் பெற வேண்டும் என்று அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் சமூக நலத்திட்டங்களில் பயன்பெற ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.