

நாடு முழுவதும் துன்பத்தில் வாடும் விவசாயிகளின் நிலையை அறிந்தும், ஆளும் பாஜக அரசு மாநிலங்களுக்கிடையே பாகுபாடு காட்டுகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ரூ.36,359 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ''இது உ.பி. விவசாயிகளுக்கான பகுதி நிவாரணம் மட்டுமே. ஆனால், சரியான பாதைக்கான முதல் அடி இது.
நெருக்கடி காலகட்டங்களில் விவசாயக் கடன்களை ரத்து செய்வதை காங்கிரஸ் எப்போதும் ஆதரித்தே வந்திருக்கிறது. இதை பாஜகவும் செய்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் நாடு முழுவதும் துன்பத்தில் வாடும் விவசாயிகளின் நிலையை எண்ணிப் பார்க்காமல் அரசியல் செய்யக் கூடாது.
மத்திய அரசு நாட்டின் பரவலான இடங்களில் ஏற்பட்டிருக்கும் வறட்சியைத் தேசிய அளவில் கருத்தில் கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு பார்க்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.
உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, 'பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து அங்கு பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகளின் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 2.15 கோடி விவசாயிகள் பயன் அடைய உள்ளனர். ஒட்டுமொத்தமாக ரூ.36,359 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தி, பாஜக மாநிலங்களுக்கிடையே பாகுபாடு காட்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.