

சமாஜ்வாதியில் கோஷ்டி மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கை உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் லக்னோவில் நேற்று சந்தித்துப் பேசினார்.
இதனிடையே சைக்கிள் சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி அகிலேஷ் தரப்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
கோஷ்டி மோதல்
சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேச முதல்வராக பதவி வகிக்கிறார். முலாயமின் சகோதரர் சிவபால் யாதவ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். ஆரம்பம்முதலே அகிலேஷும் சிவபாலும் பகிரங்கமாக மோதிக் கொண்டனர். அவர்களை முலாயம் சிங் சமரசம் செய்து வந்தார்.
தற்போதைய நிலையில் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங், அவரது சகோதரர் சிவபால் யாதவ் உள்ளிட்டோர் ஓரணியாகவும் முதல்வர் அகிலேஷ், முலாயமின் மற்றொரு சகோதரர் ராம் கோபால் யாதவ் ஆகியோர் மற்றொரு அணியாகவும் செயல்படுகின்றனர்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அந்த கட்சியில் கோஷ்டி மோதல் பூதாகரமாக வெடித்துள் ளது. அண்மையில் நடந்த அகிலேஷ் ஆதரவு சமாஜ்வாதி மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முலாயம் சிங் ஆலோசகராக, வழிகாட்டியாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
மாநிலத் தலைவர் சிவபால் யாதவ், முலாயமின் நெருங்கிய நண்பர் அமர் சிங் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
முலாயம், ராம் கோபால் மனு
இதைத் தொடர்ந்து அகிலேஷை சமாஜ்வாதி தலைவராக அங்கீகரிக்கக்கூடாது, கட்சியின் சைக்கிள் சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று வலியுறுத்தி முலாயம் சிங் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நேற்றுமுன்தினம் மனு அளித்தார்.
இதற்குப் போட்டியாக அகிலே ஷின் ஆதரவாளரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ராம் கோபால் யாதவ் டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணையத் துக்குச் சென்று மனு அளித்தார்.
அதில், நாங்கள்தான் உண்மையான சமாஜ்வாதி, 90 சதவீத எம்எல்ஏக்கள் அகிலேஷை ஆதரிக்கின்றனர். எனவே சைக்கிள் சின்னத்தை எங்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தந்தை-மகன் சந்திப்பு
இந்தப் பின்னணியில் லக்னோ வில் நேற்று முலாயம் சிங்கை முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்தித்துப் பேசினார். தந்தையும் மகனும் சுமார் 2 மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.
இச்சந்திப்பின்போது சமரசம் ஏற்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை அகிலேஷ் வட்டாரங்கள் மறுத்துவிட்டன. அவருக்கு நெருங் கிய வட்டாரங்கள் கூறியபோது, சமரசத்துக்கான காலம் கடந்து விட்டது. சைக்கிள் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிவித்தன.
முலாயம் - அகிலேஷ் சந்திப்பு குறித்து சிவபால் யாதவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், இருவரின் சந்திப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது, முலாயம் அழைத்தால் அவரை சந்தித்துப் பேசுவேன் என்று தெரிவித்தார்.